உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தயாராகுங்கள்
உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தயாராகுங்கள் என்று பா.ஜ.க.வினருக்கு அமைச்சர் நமச்சிவாயம் அழைப்பு விடுத்தார்.
புதுச்சேரி, மார்ச்.
உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தயாராகுங்கள் என்று பா.ஜ.க.வினருக்கு அமைச்சர் நமச்சிவாயம் அழைப்பு விடுத்தார்.
ஆலோசனை கூட்டம்
பா.ஜ.க.வின் பல்வேறு பிரிவுகள் மற்றும் அணிகளின் ஒருங்கிணைந்த ஆலோசனை கூட்டம் புதுச்சேரி சன்வே ஓட்டலில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாநில தலைவர் சாமிநாதன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாநில பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா கலந்துகொண்டார்.
கூட்டத்தில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது:-
கட்சியை வளர்க்கவேண்டும்
புதுச்சேரி மாநிலத்தில் பா.ஜ.க. வளர்ந்துள்ளது என்பதில் மாறுபட்ட கருத்து யாருக்கும் இல்லை. புதுச்சேரியில் பா.ஜ.க.வால் காலூன்ற முடியாது என்று சவால்விட்டவர்களிள் மூக்கின்மேல் விரல் வைக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது. இந்த வளர்ச்சியில் நாம் அனைவருக்கும் பங்கு உண்டு. தனிப்பட்ட ஒருவரால் இதுபோல் வளரவில்லை.
இந்த வளர்ச்சியில் ஒவ்வொருவரின் உழைப்பும் உள்ளது. இந்த வளர்ச்சி போதாது. இன்னும் கட்சி வளரவேண்டும். கடந்த சட்டமன்ற தேர்தலில் 6 பேர்தான் தேர்ந்தெடுக்கப்பட்டோர் 3 பேர் நமக்கு ஆதரவளிக்கிறார்கள். 3 பேர் மத்திய அரசின் அதிகாரத்தால் நியமிக்கப்பட்டனர். மீதமுள்ள 24 தொகுதிகளிலும் கட்சியை வளர்க்கவேண்டும்.
உள்ளாட்சி தேர்தலை சந்திக்க...
மேலும் மேலும் நாம் வளர்ந்தால்தான் கட்சி பொறுப்பு, அரசு பொறுப்பில் வர முடியும். எதிர்க்கட்சியாக இருந்து பாடுபட்டு ஆட்சிக்கு வந்துவிட்டோம். உழைப்பதை நிறுத்தினால் நாம் ஆட்சிக்கு வரமுடியாது. இன்னும் 2024-ல் எம்.பி. தேர்தல் வர உள்ளது.
உள்ளாட்சி தேர்தல் எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம். எனவே நாம் உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தயாராக வேண்டும். கட்சியில் புதியவர்களை இணைக்கவேண்டும். கட்சிக்கு வந்தவர்களை அரவணைத்து செல்ல வேண்டும். அப்படி இருந்தால்தான் லட்சியத்தை அடைய முடியும்.
இவ்வாறு அமைச்சர் நமச்சிவாயம் பேசினார்.
கூட்டத்தில் மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா பேசியதாவது:-
உழைப்பு
உங்களுக்கு உதவி செய்ய கட்சி மேலிடம் தயாராக உள்ளது. நான்தான் பா.ஜ.க. என்ற எண்ணம் யாருக்கும் இருக்கக்கூடாது. 1989-ல் கர்நாடகாவில் 2 எம்.எல்.ஏ.க்கள்தான் இருந்தோம். ஆனால் இப்போது ஆட்சியில் உள்ளோம். அதற்கு காரணம் உழைப்புதான். கட்சிக்காக தொகுதி, பூத் அளவில் நிர்வாகிகள், அணி நிர்வாகிகளை நியமித்தோம்.
டாக்டர், என்ஜினீயர், ஆசிரியர் என பல்வேறு தரப்பினர் நேரடியாக அரசியலில் ஈடுபடாமல் இருப்பார்கள். அவர்களையும் நமது கட்சிக்கு ஆதரவாக செயல்பட வைக்கவேண்டும். அவர்களின் செயல்பாடுகள் மூலமாகவும் கட்சி வளரும்.
இவ்வாறு நிர்மல்குமார் சுரானா பேசினார்.
மக்கள் மருந்தகம்
மாநில தலைவர் சாமிநாதன் பேசுகையில், உக்ரைன் போரில் நமது பிரதமர் இந்திய மாணவர்களை வெற்றிகரமாக மீட்டு வருகிறார். அவருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். காங்கிரசார் நாடு முழுவதும் மதுக்கடைகளை திறந்தார்கள். நமது பிரதமர் மோடியோ மக்கள் மருந்தகங்களை திறந்து வருகிறார் என்றார்.
ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் சாய்.சரவணன் குமார், எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், ரிச்சர்ட், வெங்கடேசன், அசோக்பாபு, வி.பி.ராமலிங்கம், பொதுச்செயலாளர் மோகன்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story