பழனி அடிவாரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பழனி அடிவாரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
பழனி:
பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழாவில் தினந்தோறும் முருகப்பெருமான் வள்ளி-தெய்வானையுடன் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.
மேலும் முக்கிய நிகழ்ச்சிகளான திருக்கல்யாணம் வருகிற 17-ந்தேதியும், தேரோட்டம் 18-ந்தேதியும் நடைபெறுகிறது. இதையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்தக்காவடி எடுத்து பாதயாத்திரையாக பழனிக்கு வருவர். இதற்கிடையே பங்குனி உத்திர திருவிழா முன்னேற்பாடு குறித்து கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தேரோட்டம் நடைபெறும் கிரிவீதிகள், பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்படும் சன்னதி வீதி, பூங்காரோடு, அடிவாரம் ஆகிய இடங்களில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, பழனி கோவில் நிர்வாகம் சார்பில் நேற்று பழனி அடிவாரம், கிரிவீதிகள், சன்னதி வீதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது. உதவி ஆணையர் செந்தில்குமார் தலைமையிலான அதிகாரிகள் பக்தர்களுக்கு இடையூறாக சாலையோரம் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதற்கிடையே ஒரு சில கடைக்காரர்கள் தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்பை அகற்றினர்.
பின்னர், பக்தர்களுக்கு இடையூறாக ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது என கடைக்காரர்களுக்கு கோவில் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் கோவில் கண்காணிப்பாளர் ஆறுமுகம் உள்பட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story