முகநூலில் மலர்ந்து இறுதிவரை முகம் பாராமல் வளர்ந்த காதல்: இதய நோயால் காதலி இறந்ததால் காதலன் தற்கொலை ரிஷிவந்தியத்தில் சோகம்
ரிஷிவந்தியத்தில் முகநூலில் மலர்ந்த காதலில் இறுதிவரை காதலியின் முகம் பாராமல் காதலித்து வந்த வாலிபர், அந்த காதலி இதய நோயால் இறந்து விட்டார் என்று தெரிந்தவுடன், அவரும் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ரிஷிவந்தியம்,
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஒன்றியம் மேலத்தேனூர் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் மகன் மணிகண்டன் (வயது 26). 8-ம் வகுப்பு வரை படித்துள்ள இவர், புகைப்பட கலைஞர் ஆவார். இவர் சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையத்தில் ஸ்டுடியோ வைத்து நடத்தி வந்தார்.
இவருக்கு முகநூல்(பேஸ்புக்) மூலமாக பூமிகா என்கிற பெண் அறிமுகமானார். இருவரும் முதலில் நண்பர்களாக பேசி வந்தனர். பின்னர், அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. இதுவரையில் இருவரும் நேரில் சந்தித்தது இல்லை. ஆனாலும் மணிகண்டன் பூமிகாவை ஆழமாக காதலித்து வந்துள்ளார்.
காதலி திடீர் மரணம்
ஆனால் பூமிகா இதய நோயால் பாதிக்கப்பட்டவர். இருந்தாலும், மணிகண்டனின் இதயம் முழுவதும் அவர் தான் நிறைந்திருந்துள்ளார். சில நாட்களாக பூமிகாவிடம் மணிகண்டனால் பேச முடியவில்லை. இதனால் பூமிகாவுக்கு என்ன ஆனது என்று தெரியாமல் அவர் பரிதவித்து போனார்.
தொடர்ந்து பூமிகாவின் செல்போனுக்கு அவர் தொடர்பு கொண்ட நிலையிலேயே இருந்துள்ளார். அதில், சில தினங்களுக்கு முன்பு பூமிகாவின் பாட்டி செல்போனை எடுத்து பேசினார்.
அவரிடம் பூமிகா குறித்து மணிகண்டன் கேட்டார். அப்போது அவர், இதய நோய் பாதிப்பு காரணமாக பூமிகா இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதை கேட்டவுடன், மணிகண்டனின் இதயமும் பேரதிர்ச்சிக்கு உள்ளானது, அடுத்த என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து போனார்.
விஷத்தை குடித்தார்
காதலில், ஈரிதயம் ஓர் இதயம் ஆனது என்று சொல்வார்கள், அந்த வகையில் இதய நோயால் காதலி சென்ற இடத்துக்கே சென்று விடலாம் என்கிற முடிவுக்கு மணிகண்டன் வந்தார்.
இறுதியாக, வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்தார். இதில் மயங்கி விழுந்த அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
சிகிச்சையில் இருந்த அவரிடம், குடும்பத்தினர் தற்கொலை முடிவுக்கான காரணம் குறித்து கேட்டனர். அப்போது அவர், தான் பூமிகா என்கிற பெண்ணை காதலித்ததாகவும், அவர் இறந்து விட்டதால் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்தார்.
சோகம்
இந்நிலையில் அவரது நிலை மோசமானதால், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருந்த போதிலும், மணிகண்டன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து அவரது தந்தை சக்திவேல் கொடுத்த புகாரின் பேரில் ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதலி எந்த ஊரை சேர்ந்தவர் என்கிற முழு விவரமும், நேரில் கூட அவரது முகம் பார்த்திராத நிலையில், அந்த பெண்ணுக்காக தனது உயிரை மணிகண்டன் மாய்த்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story