சின்னசேலம் அருகே மூதாட்டி கொலை சம்பவம்: இரும்பு கம்பியால் அடித்து கொன்ற பட்டதாரி வாலிபர் கைது பரபரப்பு வாக்குமூலம்


சின்னசேலம் அருகே மூதாட்டி கொலை சம்பவம்: இரும்பு கம்பியால் அடித்து கொன்ற பட்டதாரி வாலிபர் கைது பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 7 March 2022 10:56 PM IST (Updated: 7 March 2022 10:56 PM IST)
t-max-icont-min-icon

சின்னசேலம் அருகே மூதாட்டியை இரும்பு கம்பியால் அடித்து கொன்ற பட்டதாரி வாலிபரை போலீசார் கைது செய்தனர்.


சின்னசேலம், 

நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை தண்ணீர்பந்தல்காடு பகுதியை சேர்ந்தவர் பாப்பு(வயது 60). இவருடைய கணவர் கந்தசாமி கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். 

குழந்தை இல்லாத இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தகரை சின்னையா கோவில்காடு பகுதி காட்டுக்கொட்டாயில் உள்ள அவரது அக்காளான செங்கோட்டையன் மனைவி சரசு என்பவர் வீ்ட்டில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தங்கி இருந்து அக்காளின் பிள்ளைகளை பராமரித்து வந்தார்.

5-ந்தேதி இரவு  பாப்பு மட்டும் வீட்டில் இருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை பாப்பு கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதுபற்றி  சின்னசேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வாலிபர் கைது

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்  மேற்பார்வையில் சின்னசேலம் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சத்தியசீலன், மணிகண்டன், தனிப்பிரிவு ஏட்டு ஏழுமலை ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

இதில் கிராம மக்களிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், பாப்புவின் விவசாய நிலத்தில் வேலை செய்து வந்த அதே கிராமத்தை சேர்ந்த தங்கவேல் மகன் கார்த்திக் (30) மீது சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து அவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அதில், கார்த்திக் முன்னுக்கு பின் முரணான பதில் அளித்தார். மேற்கொண்டு அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர் பாப்புவை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.

இஸ்ரோ விஞ்ஞானி என்று மோசடி

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். கொலைக்கான காரணம் குறித்து கார்த்திக் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
நான் பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துள்ளேன். தற்போது பி.எச்டி படித்து விட்டு இஸ்ரோ ஆராய்ச்சி மையத்தில் தற்காலிக பணி செய்து வருவதாக கிராம மக்களை நம்ப வைத்தேன். 

மேலும் எனது மோட்டார் சைக்கிளில் முன்பக்கம் இஸ்ரோ சைன்டிஸ் (விஞ்ஞானி) என்கிற ஸ்டிக்கர் ஒன்றையும் ஒட்டி வலம் வந்தேன். இதனால் கிராம மக்கள் எனக்கு தனி மரியாதை கொடுத்து வந்தார்கள்.

அடித்து கொன்றேன்

பலரிடமும் கடன் பெற்று, வீடு ஒன்றையும் கட்டினேன். இந்த நிலையில் கடன் கொடுத்தவர்களில் ஒருவர், கடனை திருப்பி கேட்டு நெருக்கடி கொடுத்தார். அவருக்கு திங்கட்கிழமை (அதாவது நேற்று) ரூ.1½ லட்சத்தை தருவதாக தெரிவித்து இருந்தேன். 

எனது தந்தை தங்கவேல் வேலை செய்யும் செங்கோட்டையன் வீட்டில் தற்போது பாப்பு மட்டும் இருப்பதை அறிந்து,  அங்கு சென்றால் பணம் கிடைக்கும் என்று திட்டம் தீட்டி சென்றேன்.

 அங்கு இருந்த பாப்புவிடம் தனக்கு பணம் தேவை உள்ளதாக கூறி பேசினேன். ஆனால் அவர் பணத்தை தர மறுத்து விட்டார். இதனால் இரும்பு கம்பியால் பாப்புவை தலை, கழுத்து, கைளில் தாக்கினேன். இதில் துடிதுடித்து அவர் உயிரிழந்தார்.

நகையுடன் தப்பி ஓட்டம்

 இதன் பின்னர் பாப்பு அணிந்திருந்த 6 ¼ பவுன் நகை மற்றும் அங்கிருந்த தங்க காசு,  ரூ. 12 ஆயிரத்து 600 ரொக் கத்தை எடுத்தேன். அப்போது அந்த வழியாக ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்றதால், கிடைத்தவரை போதும் என்று எண்ணி தப்பி ஓடி விட்டேன். இறுதியாக போலீசார் என்னை கைது செய்து விட்டனர் என்று தெரிவித்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story