குடியாத்தம் அருகே காட்டு யானைகள் மீண்டும் விளை நிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம்


குடியாத்தம் அருகே காட்டு யானைகள் மீண்டும்  விளை நிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம்
x
தினத்தந்தி 7 March 2022 11:08 PM IST (Updated: 7 March 2022 11:08 PM IST)
t-max-icont-min-icon

குடியாத்தம் அருகே காட்டு யானைகள் மீண்டும் விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.

குடியாத்தம்

குடியாத்தம் அருகே காட்டு யானைகள் மீண்டும் விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.

காட்டு யானைகள்

குடியாத்தம் பகுதி ஆந்திர மாநில வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளதால் தமிழக எல்லையோரம் உள்ள விளை நிலங்களுக்குள் காட்டுயானைகள் அடிக்கடி புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. வனத்துறையினர், விவசாயிகள், கிராம மக்கள் உதவியுடன் யானைகள் கூட்டத்தை ஆந்திர மாநில வனப்பகுதிக்குள் விரட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் நான்கு யானைகள் கடந்த சில தினங்களாக குடியாத்தம் அடுத்த மோர்தானா, சைன குண்டா, ஆம்பூராம்பட்டி, கொட்டமிட்டா, தனகொண்டபல்லி, மோடி குப்பம் பகுதியில் உள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. நேற்று அதிகாலை இரண்டு யானைகள் தனகொடண்டபல்லி கிராமத்தில் உள்ள வெங்கடேசன், சின்னப்பன், சீனிவாசன் உள்ளிட்டோர் விளை நிலங்களுக்குள் புகுந்து ஏராளமான நெற்பயிரை சேதப்படுத்தி, மா மரங்களை உடைத்து சேதப்படுத்தியது.

பொதுமக்கள் அச்சம்

 இதுகுறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் வனச்சரக அலுவலர் சரவணன்பாபு தலைமையில், வனவர் மாசிலாமணி உள்ளிட்ட வனத்துறையினர் கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் உதவியுடன் பட்டாசுகள் வெடித்து வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.
குடியாத்தம் அடுத்த சைனகுண்டா பகுதியில் காவல்துறையின் சோதனை சாவடி அருகே யானைகள் பிளிறியபடி இருந்தது. இதனால் சோதனை சாவடி பகுதி மற்றும் கிராமத்திற்கு அருகே யானைகள் முகாமிட்டு தொடர்ந்து பிளிறியபடி இருந்ததால் கிராம மக்கள் அச்சமடைந்தனர்.

மோர்தானா கிராமத்திற்குச் செல்லும் வனப்பகுதியில் உள்ள சாலை வழியாக பொதுமக்கள் செல்லும் போது எச்சரிக்கையுடன் செல்லுமாறும், தனியாக செல்ல வேண்டாம் எனவும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Next Story