அங்காளம்மன் கோவில் தேரோட்டம் ஏராளமான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்
அங்காளம்மன் கோவில் தேரோட்டம் ஏராளமான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்
விழுப்புரம்
மாசி திருவிழா
விழுப்புரம் அருகே ஆனாங்கூர் மதுரா சாமிப்பேட்டை கிராமத்தில் உள்ள அங்காளம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 1-ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
தொடர்ந்து, அன்று இரவு அம்மன் வீதிஉலாவும், 2-ந் தேதி பூவால கப்பரையுடன் அம்மன் வீதிஉலாவும், 3-ந் தேதி சக்தி கப்பரையுடன் அம்மன் வீதியுலாவும், 4-ந் தேதி 3 முகத்துடன் அம்மன் வீதி உலாவும், 5-ந் தேதி இரவு வாண வேடிக்கை, கோட்டைக்கு தீ வைத்தல், அகோர ரூபத்துடன் முத்துப்பல்லக்கில் அம்மன் வீதிஉலாவும், நேற்று முன்தினம் அக்னி கரகத்துடன் அம்மன் வீதிஉலாவும் நடந்தது.
தேரோட்டம்
இதனை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று மாலை 4 மணியளவில் தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட தேரில், அங்காளம்மன் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளினார். இந்த தேரை ஏராளமான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்துச்சென்றனர். இந்த தேர், சாமிப்பேட்டை கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது.அதன் பிறகு மாலை 5.30 மணியளவில் மயானக்கொள்ளை நிகழ்ச்சி நடந்தது. இதில் கத்தி, சூலம், கபாலம், ஈட்டி உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்களை கையில் ஏந்தியவாறு 18 கரங்களுடன் மயான காளியாய் அங்காளம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலில் இருந்து அதே கிராமத்தில் உள்ள மயானத்திற்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டார்.
பக்தர்கள் நேர்த்திக்கடன்
அப்போது பக்தர்கள் சிலர், அங்காளம்மன், காளி, காத்தவராயன், பாவாடைராயன், கிருஷ்ணர் உள்ளிட்ட பல்வேறு வேடமணிந்து மேள, தாளங்கள் முழங்க ஊர்வலமாக மயானத்திற்கு வந்து அங்கு படையலிட்டு தாங்கள் கொண்டு வந்த காய்கறி, பழங்கள் மற்றும் மலர்களை அம்மன் மீது வீசி கொள்ளையிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவிற்கான ஏற்பாடுகளை சாமிப்பேட்டை, ஆனாங்கூர், வேட்டப்பூர், சின்னப்பேட்டை ஆகிய கிராம மக்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story