விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்
விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்
விழுப்புரம்
விழுப்புரம் அருகே உள்ள ஆரியூர் கிராமத்தை சேர்ந்தவர் சூர்யா (வயது 19). இவர் விழுப்புரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் நர்சிங் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவரும் அதே கிராமத்தை சேர்ந்த பிரசாந்த் (25) என்பவரும் கடந்த ஒரு வருடமாக ஒருவரையொருவர் உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர். இவர்களின் காதல் விவகாரம் சூர்யாவின் பெற்றோருக்கு தெரியவரவே அவர்கள், இந்த காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் சூர்யாவும், பிரசாந்தும் கடந்த 2-ந் தேதியன்று வீட்டை விட்டு வெளியேறி சென்னை சென்று அங்குள்ள ஒரு கோவிலில் மறுநாள் 3-ந் தேதி திருமணம் செய்துகொண்டனர். அதன் பிறகு அந்த திருமணத்தை சென்னை பெரியமேட்டில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்தனர். இதனையறிந்த சூர்யாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், சூர்யா மற்றும் பிரசாந்துக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை சூர்யாவும், பிரசாந்தும் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்து அங்கிருந்த போலீஸ் அதிகாரிகளிடம் தங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கக்கோரி மனு கொடுத்தனர்.
Related Tags :
Next Story