கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக சாலை மறியல்


கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக சாலை மறியல்
x
தினத்தந்தி 7 March 2022 11:19 PM IST (Updated: 7 March 2022 11:19 PM IST)
t-max-icont-min-icon

தேவிகாபுரத்தில் கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சேத்துப்பட்டு

தேவிகாபுரத்தில் கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். அப்போது போலீஸ் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது.

கடைகள் அடைப்பு

திருவண்ணாமலை மாவட்டம் தேவிகாபுரத்தில் பழமை வாய்ந்த கனககிரி ஈஸ்வரர், பெரியநாயகி அம்மன் கோவில் உள்ளது.

இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் ஒவ்வொரு வருடமும் பங்குனி உத்திர திருவிழா 14 நாட்கள் நடைபெறுவது வழக்கம். 

இந்த விழாவை ஊர் பொதுமக்கள் ஒரு பிரிவினர் மட்டும் நடத்தி வருகின்றனர். இந்த வருட பங்குனி உத்திர திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்க உள்ள நிலையில் மற்றொரு பிரிவினர் எங்களுக்கும் ஒரு நாள் திருவிழா நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கேட்டனர். 

இதற்கு வழக்கமாக திருவிழா நடத்தும் ஒரு பிரிவினர் அனுமதி மறுத்துள்ளனர். இதையடுத்து நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் திருவிழா நடத்தும் பிரிவினர் அனைத்து கடைகளுக்கும் சென்று இன்று (நேற்று) ஒரு நாள் அனைவரும் கடையடைப்பு போராட்டம் செய்ய வேண்டும் என கேட்டனர்.

அதன்படி நேற்று தேவிகாபுரத்தில் சுமார் 400-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.

சாலை மறியல்

காலை 9 மணி அளவில் 500-க்கும் மேற்பட்ட ஊர் பொதுமக்கள் தேவிகாபுரம் பஸ் நிறுத்தத்தில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். 

அவர்கள் வழக்கம்போல திருவிழா நடத்தும் பிரிவினர் மட்டும் திருவிழா நடத்த வேண்டும் என்று கூறினர். சுமார் 3 மணி நேரம் மறியல் நடந்ததால் சேத்துப்பட்டு, போளூர,் ஆரணி ஆகிய பகுதிகளுக்கு வாகனங்கள் செல்ல முடியாமல் ஆங்காங்கே நின்றது.

தகவல் அறிந்ததும் வருவாய்த்துறையினர், காவல்துறை அதிகாரிகள் சென்று மறியலை கைவிட்டு கலைந்து செல்லுமாறு கூறியும் கலைந்து செல்லாததால், போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.  அப்போது கூட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போலீஸ் ஜீப் கண்ணாடி உடைக்கப்பட்டது. 

பின்னர் செய்யாறு வருவாய் கோட்டாட்சியர் விஜயராஜ், சேத்துப்பட்டு தாசில்தார் கோவிந்தராஜ், துணைபோலீஸ் சூப்பிரண்டுகள் குணசேகரன், கோடீஸ்வரன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிட செய்தனர். பின்னர் பொதுமக்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த வேலூர் சரக டி.ஐ.ஜி. ஆனிவிஜயா சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டார். 

அமைதி கூட்டம்

இதுதொடர்பான அமைதி கூட்டம் சேத்துப்பட்டு தாலுகா அலுவலகத்தில் நடந்தது. இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜோதிலட்சுமி தலைமை தாங்கினார். செய்யார் வருவாய் கோட்டாட்சியர் விஜயராஜ், போளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன், சேத்துப்பட்டு தாசில்தார் கோவிந்தராஜ், செய்யாறு தாசில்தார் சுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

கூட்டத்தில் இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜோதிலட்சுமி, ஒருதரப்பினர் நீதிமன்றம் சென்று உள்ளதால் தீர்ப்பு வரும் வரை அமைதியாக இருக்குமாறு கூறினார். இதில் சமரசம் அடையாத விழாக்குழு பொறுப்பாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் எந்தவித பதிலும் கூறாமல் கூட்டத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறினார்கள்.

Next Story