வீடு கட்ட வாங்கிய கடனை அடைக்க முடியாததால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை


வீடு கட்ட வாங்கிய கடனை அடைக்க முடியாததால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 8 March 2022 12:09 AM IST (Updated: 8 March 2022 12:09 AM IST)
t-max-icont-min-icon

சாமிதோப்பு அருகே வீடு கட்ட வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாததால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தென்தாமரைகுளம்,
சாமிதோப்பு அருகே வீடு கட்ட வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாததால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சோக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
கட்டிட தொழிலாளி
சாமிதோப்பு அருகே உள்ள செட்டிவிளையைச் சேர்ந்தவர் ராஜமணி. இவருக்கு மனைவியும், 5 மகன்களும் உள்ளனர். இதில் 3 மகன்களுக்கு திருமணமாகி விட்டது.
இந்த நிலையில் ராஜமணியும், அவரது மனைவியும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டனர். ராஜமணியின் 4-வது மகன் தங்க செல்வன் (வயது 33), கட்டிட தொழிலாளி. இவர் தனக்கு சொந்தமாக வீடு ஒன்றை கட்டியுள்ளார். அப்போது பணம் தேவை அதிகமாக இருந்ததால் வீட்டு பத்திரத்தை கொடுத்து கடன் வாங்கியதாக தெரிகிறது.
தற்கொலை
இந்தநிலையில் கடன் கொடுத்தவர்கள் கடனை திருப்பி கேட்க தொடங்கியுள்ளனர். குறிப்பிட்ட தேதி முடிந்தவுடன் வீட்டு பத்திரம் கடன் கொடுத்தவர் பெயருக்கு மாறிவிடும் என்பதால் கடந்த சில நாட்களாக அவர் மனவருத்தத்தில் இருந்துள்ளார். குடும்பத்தில் பலரிடம் பணஉதவி கேட்டும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்தநிலையில் தங்க செல்வன் நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு அருகில் உள்ள ஒரு தென்னந்தோப்பில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். நேற்று காலையில் அந்த பகுதிக்கு சென்றவர்கள், இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இதுபற்றி தகவல் அறிந்ததும் தென்தாமரைகுளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் மற்றும் போலீசார் விரைந்து வந்து தங்க செல்வனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக  ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story