சின்ன வெங்காயத்திற்கு ஆதார விலை நிர்ணயிக்கக்கோரி நூதன ஆர்ப்பாட்டம்
சின்ன வெங்காயத்திற்கு குறைந்தபட்ச ஆதார விலை ரூ.30 என நிர்ணயிக்கக்கோரி பெரம்பலூரில் விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர்
தமிழ்நாட்டில் காரிப் மற்றும் ராபி பருவ காலங்களில் 75 ஆயிரம் ஏக்கரிலும், பெரம்பலூர் மாவட்டத்தில் ஆண்டுக்கு சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலும் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. மத்திய அரசு. பெரிய வெங்காயத்திற்கு குறைந்தபட்ச ஆதார விலையை நுகர்வோர் நலத்துறை மூலம் நிர்ணயம் செய்து கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளதைபோல சின்ன வெங்காயத்திற்கும் கிலோவிற்கு ரூ.30 என குறைந்தபட்சம் ஆதார விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்ய வேண்டும். இதனை, தமிழக அரசு பட்ஜெட்டில் சேர்த்து விவசாயிகளின் நலன் காக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூரில் தமிழக விவசாயிகள் சங்கத்தை சேர்ந்தவர்கள் தலையில் வெங்காயத்தை சுமந்து கொண்டும், கழுத்தில் வெங்காயத்தை மாலையாக அணிந்து கொண்டும் கலெக்டர் அலுவலகம் முன்பு நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கலெக்டரிடம் மனு
முன்னதாக பெரம்பலூர் பாலக்கரை வளைவில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு கலெக்டர் அலுவலகத்தை வந்தடைந்தனர். பின்பு கலெக்டர் அலுவலகம் முன்பு கோரிக்கை முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நூதன ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாநில செயலாளர் ராஜா சிதம்பரம் தலைமை வகித்தார். ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்க முன்னாள் மாநில பொறுப்பாளர் வேணுகோபால் முன்னிலை வகித்தார். சங்கத்தின் மாவட்ட செயலாளர் நீலகண்டன், மாவட்ட பொருளாளர் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து கலெக்டர் வெங்கடபிரியாவிடம் விவசாய சங்க பிரதிநிதிகள் கோரிக்கை மனு கொடுத்து, தமிழக அரசுக்கு பரிந்துரைக்குமாறு கேட்டுக் கொண்டனர்.
Related Tags :
Next Story