கோவிலில் தங்க காசு, பூஜை பொருட்கள் திருட்டு
குன்னம் அருகே கோவிலில் தங்க காசு, பூஜை ெபாருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
குன்னம்
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள மருவத்தூர் கிராமம் எல்லை பகுதியில் மருவத்தூர் பேரளி செல்லும் சாலை காட்டுப்பகுதியில் செல்லியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த மாதம் 6-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இக்கோவிலின் பூசாரி செந்தில் முருகன் நேற்று முன்தினம் சாமிக்கு அபிஷேகம் செய்து விட்டு கோவிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார்.
அதனைத்தொடர்ந்து நேற்று பிற்பகல் கோவிலுக்கு வந்தார். அப்போது மர்ம நபர்கள் சிலர் கோவிலின் இரும்பு கதவை உடைத்து உள்ளே சென்று வெளிப்பகுதியில் இருந்த பீரோவை உடைத்து அம்மனுக்கு அலங்கரிக்க வைக்கப்பட்டிருந்த கால் பவுன் எடை கொண்ட நெற்றி பொட்டு காசு மற்றும் 4 குத்து விளக்குகள், பூஜை செய்ய பயன்படுத்தும் 4 மணிகள், செப்புக்குடம், பித்தளை சொம்பு, பித்தளை குடம், தீபம் காட்டும் தட்டு, தாம்பாள தட்டு, ரூ.2 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.50 ஆயிரம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
போலீசார் வலைவீச்சு
இதுகுறித்து கோவில் பூசாரி செந்தில் முருகன் மருவத்தூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கடந்த சில மாதங்களாக இப்பகுதியில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. ஆகவே, போலீசார் ரோந்துப்பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story