தர்பூசணி பழங்கள் வரத்து அதிகரிப்பு


தர்பூசணி பழங்கள் வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 8 March 2022 1:24 AM IST (Updated: 8 March 2022 1:24 AM IST)
t-max-icont-min-icon

கும்பகோணத்தில் தர்பூசணி பழங்கள் வரத்து அதிகரித்துள்ளது. கிலோ ரூ.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கும்பகோணம்:
கும்பகோணத்தில் தர்பூசணி பழங்கள் வரத்து அதிகரித்துள்ளது. கிலோ ரூ.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 
தர்பூசணி பழங்கள் வரத்து அதிகரிப்பு 
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கோடைக்காலங்களில் வெப்பம் காரணமாக பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் பொதுமக்கள் தங்களது உடல் வெப்பநிலையை பாதுகாக்க குளிர்பானங்கள், இளநீர்,  தர்பூசணி பழங்கள் உள்ளிட்டவற்றை வாங்கி சாப்பிட்டு வருகின்றனர்.  நீர்சத்து அதிகம் உள்ள தர்பூசணி பழங்களுக்கு கோடைகாலத்தில் மவுசு அதிகரித்து காணப்படுவது வழக்கம்.  அதன்படி கும்பகோணம் பகுதியில் தர்பூசணி பழங்களின் வரத்து அதிகரித்துள்ளது. கும்பகோணம் பகுதியில் பஸ் நிலையம், ெரயில் நிலையம், பெரிய கடைத்தெரு, தாராசுரம் மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏராளமான வியாபாரிகள் வெளி மாவட்டங்களில் இருந்து தர்பூசணி பழங்களை அதிக அளவில் கொண்டு வந்து விற்பனைக்காக குவித்து வைத்துள்ளனர். தர்பூசணி பழங்களை பொதுமக்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர். 
கிலோ ரூ.20-க்கு விற்பனை 
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், 
நாங்கள் தர்மபுரி, திண்டுக்கல் உள்ளிட்ட வெளி மாவட்டங்கள் இருந்து தர்பூசணி பழங்களை கொள்முதல் செய்து கும்பகோணம் பகுதியில் விற்பனை செய்து வருகிறோம். கிலோ ரூ. 20-க்கு விற்பனை செய்து வருகிறோம். இதன் மூலம் கணிசமான லாபம் கிடைக்கிறது. தற்போது கும்பகோணம் சுற்றுவட்டார பகுதியில் ஒருசில விவசாயிகள் தர்பூசணி பழங்களை சாகுபடி செய்துள்ளனர். கோடை காலத்தில் வரத்து அதிகரித்து பழங்கள் விலை குறைய வாய்ப்புள்ளது. உடலுக்கு மிகுந்த குளிர்ச்சியை தருவதால் பொதுமக்களும் தர்பூசணி பழங்களை விரும்பி வாங்கி செல்கின்றனர் என்றனர். 

Next Story