மகளிர் தினமும்... சாதனை பெண்களும்...
மகளிர் தினத்தன்று சாதனை பெண்களும் ஒரு நேர்காணல்.
விருதுநகர்,
சங்க காலத்தில் இருந்தே பெண்களை போற்றி புகழ்வது தமிழினம். வளமை தரும் ஆறுகளுக்கு பெண்கள் பெயரையே சூட்டினார்கள். கல்வியில் சிறந்தவர்களாகவும், அரசாளும் திறன் பெற்றவர்களாகவும் பெண்கள் விளங்கி வருகிறார்கள்.
வரலாற்று பக்கத்தை சற்று புரட்டி பார்த்தால் பல பெண்கள் ஆண்களுக்கு இணையாக அனைத்து துறைகளிலும் சாதித்து இருப்பது தெரியவரும். பெண்களை புகழாத சங்க இலக்கியங்களே இல்லை. ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருப்பார் என்பது உண்மை வாக்கு. மகளிர் தினமான இன்று (மார்ச்-8) பல்வேறு துறைகளில் ஆதிக்கம் செலுத்தும் பெண்கள் கூறியது இங்கே:-
ஞான கவுரி
நான் விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக பணியாற்றுகிறேன். எனது கணவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். எனது இரண்டு மகள்களும் கல்விப் பணியிலும், தகவல் தொழில்நுட்பத் துறையிலும் பணியாற்றி வருகின்றனர். விவசாய குடும்பத்தில் பிறந்த எனக்கு அரசு பணி சிரமமாக தெரியவில்லை. வீட்டில் இருக்கும் பொழுது அலுவலக பணி நினைவுக்கு வருவது இயல்புதான். ஆனால் அலுவலக பணியில் இருக்கும் போது வீட்டின் நினைவு வருவதில்லை. பணி முடிந்த பின்புதான் வீட்டை பற்றிய எண்ணம் வரும். பெண்கள் நினைத்தால் அனைத்து துறையிலும் எளிதில் சாதிக்க முடியும்.
அர்ச்சனா
நான் விருதுநகரில் துணை போலீஸ் சூப்பிரண்டாக உள்ளேன். எனது கணவர் ரமேஷ் தகவல் தொழில்நுட்பத் துறையில் சென்னையில் பணியாற்றி வருகிறார். எனது மகன் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். எங்களுடன் எனது பெற்றோரும், எனது மாமியாரும் இருப்பதால் வீட்டு நிர்வாகத்தை கவனிக்க அவர்கள் பெரும் உதவியாக இருக்கிறார்கள். பெண்கள் நினைத்தால் வீட்டு பணியையும், அலுவலகப்பணியையும் முறையாக நிர்வகிக்க முடியும்.
திலகவதி
நான் விருதுநகரில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனராக பணியாற்றி வருகிறேன். எனது கணவர் தாமரை ஜெயக்குமார் திண்டுகல்லில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். எங்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். குழந்தைகளுக்கு எனது அலுவலக கடமை பற்றி சொல்லி வளர்த்துள்ளதால் அவர்கள் என்னுடைய நிலைமை புரிந்து நடந்து கொள்கிறார்கள். ஆதலால் எவ்வித இடையூறு இல்லாமல் பணியில் ஈடுபட்டு வருகிறேன். எனது கணவரும் எனது அலுவலக பணியை செய்வதில் பெரும் உதவியாக உள்ளார். பெண்கள் நினைத்தால் வீடு மற்றும் அலுவலக நிர்வாகத்தை திறம்பட செயல்படுத்த முடியும்.
சங்கீதா இன்பம்
சிவகாசி மாநகராட்சியின் முதல் மேயராக என்னை தேர்வு செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. சிவகாசி மாநகராட்சியில் மொத்தம் 48 வார்டுகள் உள்ளன. இதில் 26 வார்டுகளில் பெண் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள். இது இரட்டிப்பு மகிழ்ச்சியை அளிக்கிறது. பல்வேறு துறைகளில் பெண்கள் சாதனை படைத்து வருகின்றனர். வருகிற காலங்களிலும் இது தொடரும்.
Related Tags :
Next Story