ஹலகூர் அருகே சிறுத்தை தாக்கி விவசாயி படுகாயம்
ஹலகூர் அருகே சிறுத்தை தாக்கி விவசாயி படுகாயமடைந்தார்.
ஹலகூர்:
மண்டியா மாவட்டம் மலவள்ளி தாலுகா ஹலகூர் அருகே வட்டரதொட்டி எனும் கிராமம் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இதனால் வனப்பகுதியில் இருந்து சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் இரைதேடி கிராமத்திற்குள் நுழைந்து கால்நடைகளை வேட்டையாடும் சம்பவங்கள் அவ்வப்போது நடக்கிறது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு அதேகிராமத்தை சேர்ந்த விவசாயி சென்னராஜ் என்பவர் கொட்டகையில் இருந்த ஆடுகளுக்கு பாதுகாப்பாக வீட்டு திண்ணையில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார்.
அப்போது நள்ளிரவு வனப்பகுதியில் இருந்து சிறுத்தை ஒன்று இரைதேடி கிராமத்திற்குள் புகுந்தது. பின்னர் சிறுத்தை சென்னராஜின் கொட்டகைக்குள் புகுந்து ஆடுகளை வேட்டையாட முயன்றது. இதனால் ஆடுகள் கத்தி கூச்சலிட்டது. இதனால் கண்விழித்த சென்னராஜ் ஆடுகளை காப்பாற்ற சிறுத்தையை விரட்டினார். இதனால் சிறுத்தை, சென்னராஜை தாக்கியது. இதில் சென்னராஜ் கத்தி கூச்சலிட்டார். இந்த சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து சிறுத்தையை விரட்டியடித்தனர்.
இதையடுத்து சிறுத்தை தாக்கி படுகாயம் அடைந்த சென்னராஜை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக மலவள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி தகவல் அறிந்த வனத்துறையினர் ஆஸ்பத்திரிக்கு வந்து சிகிச்சை பெறும் சென்னராஜூக்கு ஆறுதல் கூறினர். மேலும் அவரின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்குவதாக உறுதியளித்தனர்.
Related Tags :
Next Story