சத்தியமங்கலம் அருகே ரேஷன் கடை அமைக்க வேண்டும்; மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் மனு


சத்தியமங்கலம் அருகே ரேஷன் கடை அமைக்க வேண்டும்; மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 8 March 2022 2:10 AM IST (Updated: 8 March 2022 2:10 AM IST)
t-max-icont-min-icon

சத்தியமங்கலம் அருகே ரேஷன் கடை அமைக்க வேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

ஈரோடு
சத்தியமங்கலம் அருகே ரேஷன் கடை அமைக்க வேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.
ரேஷன் கடை
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி முருகேசன் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக எழுதி அதிகாரிகளிடம் கொடுத்தனர்.
சத்தியமங்கலம் அருகே சிக்கரசம்பாளையம் பாரதிநகரை சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுவினர் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறிஇருந்ததாவது:-
எங்கள் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். விவசாய கூலி வேலை செய்யும் எங்களது பகுதியில் ரேஷன் கடை இல்லை. சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சிக்கரசம்பாளையம் ரேஷன் கடைக்கு நடந்து சென்று பொருள்களை வாங்கி வரவேண்டி உள்ளது. எந்த நேரத்தில் என்ன பொருட்கள் வழங்கப்படுகிறது என்பதையும் தெரிந்து கொள்ள முடியவில்லை. எனவே எங்கள் பகுதியில் பகுதி நேர ரேஷன் கடையை அமைத்து கொடுக்க வேண்டும். மேலும், மயான  வசதி இல்லாததால் ஓடையில் பிணங்களை புதைத்து வருகிறோம். எனவே தனியார் ஆக்கிரமிப்பில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களை கையகப்படுத்தி மயானம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்குள்ள ஒரு மளிகை கடையில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்படுகிறது. அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்தனர்.
சாதி சான்றிதழ்
ஈரோடு பவானிரோடு அன்னை சத்யாநகரை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறிஇருந்ததாவது:-
எங்கள் பகுதியில் குடியிருப்புகளுக்கு அருகில் தனியாருக்கு சொந்தமான சுண்ணாம்பு சூளை செயல்படுகிறது. அங்கிருந்து வெளியேறும் புகையாலும், காற்றில் பறக்கும் சாம்பலாலும் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. குழந்தைகள், முதியவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்படுகிறது. வீடுகளில் சுண்ணாம்பு சாம்பல் படிந்து கிடப்பதால் சமையல் பாத்திரங்களை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே சுண்ணாம்பு சூளையை செயல்பட அனுமதிக்கக்கூடாது.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்தனர்.
சத்தியமங்கலம் கோட்டுவீராம்பாளையம் பகுதியை சேர்ந்த பாலமுருகன் என்பவர் கொடுத்த மனுவில், “நாங்கள் பழங்குடியின எஸ்.டி. பிரிவில் உள்ள காட்டு நாயக்கர் வகுப்பை சேர்ந்தவர்கள். எங்களுக்கு சாதி சான்றிதழ் இதுவரை வழங்கப்படவில்லை. கடந்த 2016-ம் ஆண்டு முதல் பலமுறை விண்ணப்பித்தும் சான்றிதழ் கிடைக்கவில்லை. இதனால் எங்கள் பகுதியில் உள்ள 168 குடும்பத்தினரின் குழந்தைகள் கல்வி கற்க முடியாத நிலை உள்ளது. எஸ்.எஸ்.எல்.சி. படிக்கும் எனது மகனுக்கும் சாதிச்சான்றிதழ் கிடைக்காததால், எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது”, என்று கூறிஇருந்தார்.
பூப்பறிக்கும் மலை
தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தினர் கொடுத்த மனுவில், “சென்னிமலை உப்பிலிபாளையம் சாலையில் உள்ள 6.85 ஏக்கர் பூப்பறிக்கும் மலையை தனியாருக்கு சொந்தமானதாக கூறி வெட்டி அழித்து வருகின்றனர். இதுகுறித்து உரிய ஆவணங்களை சரிபார்க்குமாறு அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை மனு கொடுத்து உள்ளோம். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உடனடியாக நடவடிக்கை எடுத்து மலை அழிக்கப்படுவதை தடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் போராட்டம் நடத்தப்படும்”, என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த கூட்டத்தில் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, வேலை வாய்ப்பு, கல்விக்கடன், அடிப்படை வசதிகள் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 162 மனுக்களை பொதுமக்கள் கொடுத்தனர். இதில் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் குமரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story