வடகிழக்கு பருவமழையால் சேதமடைந்த சாலைகள், கால்வாய்களில் சீரமைப்பு பணி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு


வடகிழக்கு பருவமழையால் சேதமடைந்த சாலைகள், கால்வாய்களில் சீரமைப்பு பணி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 8 March 2022 2:18 AM IST (Updated: 8 March 2022 2:18 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் சேதமடைந்த சாலைகள் மற்றும் கால்வாய்களில் நடந்த சீரமைப்பு பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.

நாகர்கோவில், 
குமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் சேதமடைந்த சாலைகள் மற்றும் கால்வாய்களில் நடந்த சீரமைப்பு பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
வடகிழக்கு பருவமழையால் குமரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 15-ந் தேதி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். அப்போது சீரமைப்பு பணிகளை விரைவாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதோடு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். அதன் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்வதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று குமரி மாவட்டத்திற்கு வந்தார். மதியம் 2.30 மணி அளவில் நாகர்கோவில் ராமவர்மபுரம் அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்த அவர் சிறிது நேரம் ஓய்வெடுத்தார். பின்னர் மாலை 4.30 மணி அளவில் ஆய்வு பணியை தொடங்கினார்.
முதலில் நாகர்கோவில் மத்தியாஸ் வார்டு பகுதியில் இருந்து மேலராமன்புதூர் எம்.ஜி.ஆர். சிலை பகுதிக்கு செல்லும் சாலையில் நடந்த சீரமைப்பு பணியை நேரில் ஆய்வு செய்தார். அப்போது நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலைகளை சீரமைப்பதற்காக குடிநீர் அபிவிருத்தி திட்டம் மற்றும் பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் ரூ.10 கோடியில் மேற்கொள்ளப்பட்ட 12.59 கி.மீ. நீளத்திற்கான 19 சாலை பணிகள், மூலதன மானிய நிதி திட்டத்தின் கீழ் ரூ.16 கோடியில் மேற்கொள்ளப்பட்ட 40 சாலை பணிகள் குறித்த தகவலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் சீரமைப்பு பணிகள் குறித்த விவரங்களையும் அவர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
பேயன்குழி-குமாரகோவில்
அதைத்தொடர்ந்து நாகர்கோவிலில் இருந்து பேயன்குழிக்கு அவர் காரில் புறப்பட்டு சென்றார். அங்கு இரட்டைக்கரை கால்வாயில் உடைப்பு ஏற்பட்டதன் காரணமாக குளங்களில் நீர் அளவு மிகவும் குறைந்து, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் பாதிப்படைந்த நிலையில் தமிழ்நாடு மாநில பேரிடர் நிதியிலிருந்து ரூ.60 லட்சத்தில் 3 ராட்சத இரும்பு குழாய்கள் வழியாக தண்ணீர் கொண்டு செல்வதற்கான பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு பயன்பாட்டுக்கு வந்ததை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
இதனையடுத்து குமாரகோவில்-பத்மநாபபுரம் புத்தனார் கால்வாய் அணைக்கட்டு பகுதியில் உடைப்பு ஏற்பட்ட இடத்தை ரூ.20 லட்சத்தில் சீரமைத்து பயன்பாட்டுக்கு வந்ததை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதிகாரிகளுடன் ஆலோசனை
இந்த ஆய்வின்போது அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, மனோ தங்கராஜ், விஜய் வசந்த் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், பத்மநாபபுரம் நகராட்சி தலைவர் அருள்சோபன், குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த், மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் மற்றும் உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
முன்னதாக நாகர்கோவில் ராமவர்மபுரம் அரசு விருந்தினர் மாளிகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தங்கியிருந்த போது குமரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் குறித்து பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை, மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

Next Story