கலெக்டர் அலுவலகத்தில் அணி, அணியாக வந்து மனு கொடுத்த மக்கள்
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் அணி, அணியாக வந்து கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.
நெல்லை:
கொரோனா மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடவடிக்கைகளால் நெல்லை மாவட்டத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் தேர்தல் முடிவடைந்து இருப்பதால் நேற்று மீண்டும் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் விஷ்ணு, மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள் மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, நடவடிக்கை எடுக்க அந்தந்த துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.
இதையொட்டி நேற்று நெல்லை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் அணி, அணியாக திரண்டு வந்தனர். அவர்கள் தங்களது கோரிக்கை தொடர்பாக மனுக்களை கொடுத்தனர்.
தாமிரபரணி திருநெல்வேலி கால்வாய் நயினார்குளம் பாசன சங்க தலைவர் நெல்லையப்பன் தலைமையில் நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அதில், ‘‘நயினார்குளம் பாசனத்தில் 586 ஏக்கர் நஞ்சை நிலம் உள்ளது. இதில் 2 போகம் நெல் பயிரும், ஒரு போகம் உளுந்து பயிரும் விளைவிக்கப்படுகிறது. மேலும் முன்னதாக சுத்தமல்லியில் இருந்து தென்பத்து, கருப்பந்துறை, கண்டியப்பேரி, சத்திரம் புதுக்குளம் வரை 3 ஆயிரம் ஏக்கரில் நெல் விளைவிக்கப்படுகிறது. இங்கு அறுவடை காலத்தில் இடைத்தரகர்கள் மூலம் நெல் கொள்முதல் செய்வதால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. எனவே அரசு விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்ய நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். மேலும் நயினார்குளம் கால்வாய்களை தூர்வார வேண்டும்’’ என்று கூறிஉள்ளனர்.
மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் அந்த கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி மனு கொடுத்தனர். அந்த மனுவில், ‘‘நெல்லை ராமையன்பட்டி பஞ்சாயத்து சிவாஜி நகர், கண்டியப்பேரி பகுதிகளில் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டு, அதில் பெரும்பாலானோர் வீடு கட்டி குடியிருந்து வருகிறார்கள். இதில் வீடு கட்டாமல் காலியாக உள்ள இடங்களை இடைத்தரகர்கள் மூலமாக வருவாய்த்துறை அதிகாரிகள் வேறு நபர்களுக்கு வீடு கட்ட அனுமதி அளித்து வருகிறார்கள். அதனால் அங்கு பலர் ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் கட்டி வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், பட்டாக்களை மாற்றம் செய்யக்கூடாது’’ என்று கூறிஉள்ளனர்.
தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் நெல்லை மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் திரண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், ‘‘அம்பை தாலுகா அலுவலகத்தில் தேவேந்திரகுல வேளாளர் சமுதாய மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க மறுத்து வருகின்றனர். இதற்கு காரணமான அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story