சிறுமியை திருமணம் செய்த தொழிலாளி போக்சோவில் கைது; உடந்தையாக இருந்த தாய்- தந்தை உள்பட 5 பேர் சிக்கினர்


சிறுமியை திருமணம் செய்த தொழிலாளி போக்சோவில் கைது; உடந்தையாக இருந்த தாய்- தந்தை உள்பட 5 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 8 March 2022 2:33 AM IST (Updated: 8 March 2022 2:33 AM IST)
t-max-icont-min-icon

சிறுமியை திருமணம் செய்த தொழிலாளியை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும் தொழிலாளிக்கு உடந்தையாக செயல்பட்டதாக தாய், தந்தை உள்பட 5 பேரும் கைது செய்யப்பட்டனர்.

சத்தியமங்கலம்
சிறுமியை திருமணம் செய்த தொழிலாளியை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும் தொழிலாளிக்கு உடந்தையாக செயல்பட்டதாக தாய், தந்தை உள்பட 5 பேரும் கைது செய்யப்பட்டனர்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கட்டிட தொழிலாளி 
சேலத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியம் (வயது 30). கட்டிட தொழிலாளி. இவர் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பகுதியில் கட்டிட தொழிலில் ஈடுபட்டு வந்தார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமிக்கும், அவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த 4-ந் தேதி பெற்றோர்கள் சம்மதத்துடன் சத்தியமங்கலத்தை அடுத்த டி.என்.பாளையத்தில் உள்ள ஒரு கோவிலில் அந்த சிறுமியை சுப்பிரமணியம் திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்து ஈரோடு மாவட்ட குழந்தைகள் நல குழுவுக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்ததும் மாவட்ட குழந்தைகள் நல குழு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், 15 வயது சிறுமிக்கு திருமணம் நடைபெற்றது உறுதி செய்யப்பட்டது. 
கைது
இதையடுத்து மாவட்ட குழந்தைகள் நல குழு சார்பில் சத்தியமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை திருமணம் செய்த சுப்பிரமணியத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். 
மேலும் சிறுமி திருமணத்துக்கு உடந்தையாக செயல்பட்டதாக சுப்பிரமணியத்தின் தந்தை பழனிச்சாமி (65), தாய் பொன்னம்மாள் (59), மாமா முத்து (50), சிறுமியின் தாய், மற்றும் ஈரோட்டில் உள்ள சிறுமியின் அத்தை ஆகியோரையும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

Next Story