மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் இன்று நள்ளிரவு ஒடுக்கு பூஜை
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் இன்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு ஒடுக்கு பூஜை நடக்கிறது.
மணவாளக்குறிச்சி,
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் இன்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு ஒடுக்கு பூஜை நடக்கிறது.
மாசிக்கொடை விழா
குமரி மாவட்டத்தில் உள்ள முக்கியமான கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் மாசிக்கொடை திருவிழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பின்னர் சமய மாநாடு, அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதல், யானை மீது களப பவனி, வில்லிசை, பஜனை, பரத நாட்டியம் மற்றும் கலைநிகழ்ச்சிகளும் நடந்தன. விழாவின் 6-ம் திருவிழாவன்று நள்ளிரவு 12 மணிக்கு வலிய படுக்கை பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
பெரிய சக்கர தீ வெட்டி
விழாவின் 9-ம் திருவிழாவான நேற்று காலையில் அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதலும், மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், இரவு 9 மணிக்கு அத்தாழ பூஜையும், 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதலும், பெரிய சக்கர தீவெட்டியில் அலங்கார பவனி வருதல் நிகழ்ச்சியும் நடந்தது.
இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
ஒடுக்கு பூஜை
விழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 2 மணிக்கு மண்டைக்காடு சாஸ்தா கோவிலில் இருந்து புனித நீர் கொண்டு வருதல் நிகழ்ச்சியும், 3.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதலும், 4 மணிக்கு அடியந்திர பூஜையும், காலை 6 மணிக்கு குத்தியோட்டம், 6.30 மணிக்கு சாயரட்சை பூஜையும் நடக்கிறது.
மாலை 4 மணிக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் சமய மாநாடு நடக்கிறது. ஹைந்தவ சேவா சங்க தலைவர் கந்தப்பன் தலைமை தாங்குகிறார். பொதுச் செயலாளர் ரெத்தினபாண்டியன் அறிமுகம் செய்து வைக்கிறார். பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார். இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதலும், நள்ளிரவு 12 மணிக்கு மேல் 1 மணிக்குள் ஒடுக்கு பூஜையும் நடக்கிறது.
இந்த பூஜையில் குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வதற்காக இப்போதே குவிந்து வருகிறார்கள். இதனால் அங்கு அம்மனை தரிசிக்க கூட்டம் அலைமோதி வருகிறது.
Related Tags :
Next Story