டி.என்.பாளையம் அருகே பரபரப்பு திருமண வீட்டில் 25 பவுன் நகை கொள்ளை; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
டி.என்.பாளையம் அருகே திருமண வீட்டில் 25 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
டி.என்.பாளையம்
டி.என்.பாளையம் அருேக திருமண வீட்டில் 25 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
அரிசி ஆலை உரிமையாளர்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே டி.என்.பாளையத்தை அடுத்து உள்ள கொங்கர்பாளையத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 55). அரிசி ஆலை உரிமையாளரான இவர் கேபிள் டி.வி. ஆபரேட்டராகவும் உள்ளார்.
நேற்று முன்தினம் இவருடைய மகள் கிருத்திகாவுக்கு சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது. அதனால் ஜெயக்குமார், அவருடைய மனைவி கவிதா, மகன் சந்தோஷ் ஆகியோர் மண்டபத்தில் இருந்தார்கள். கொங்கர்பாளையத்தில் உள்ள வீடு பூட்டப்பட்டு இருந்தது.
25 பவுன் கொள்ளை
திருமணம் முடிந்ததும் ஜெயக்குமார் குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு திரும்பினார். வீட்டை திறந்து உள்ளே சென்றபோது படுக்கை அறையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்து ஜெயக்குமார் அந்த அறைக்கு சென்று பார்த்தார். அப்போது அறையில் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே இருந்த 25 பவுன் நகைகளை காணவில்லை. யாரோ மர்ம நபர்கள் கொள்ளையடித்துச்சென்றது தெரிய வந்தது.
மோப்ப நாய்
இதுபற்றி ஜெயக்குமார் உடனே பங்களாப்புதூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் கோபி துணை போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம், சத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் மற்றும் பங்களாப்புதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்கள்.
மேலும் ஈரோட்டில் இருந்து மோப்ப நாய் வீரா வரவழைக்கப்பட்டது. அது திருட்டு நடந்த அறையில் இருந்து தோப்பூர் காலனி வரை ஓடிச்சென்று நின்றுவிட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதேபோல் கைரேகை நிபுணர்களும் வந்து பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தார்கள்.
பின்பக்கமாக நுழைந்தனர்...
ஜெயக்குமார் குடும்பத்துடன் மகள் திருமணத்துக்காக சத்தியமங்கலம் சென்றிருந்த நேரத்தில் கொள்ளையர்கள் கைவரிசை காட்ட திட்டமிட்டு இருந்திருக்கிறார்கள். நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன்பக்கத்தில் பொதுமக்கள் நடமாட்டம் இருந்ததால் பக்கத்து வீட்டு மாடிக்கு ஏறி, அங்கிருந்து ஜெயக்குமாரின் வீட்டு மாடிக்கு வந்துள்ளனர். பின்னர் பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்து படுக்கை அறையின் பூட்டையும், பீரோவையும் உடைத்து 25 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்றது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
வலைவீச்சு
இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
இதற்காக அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகிறார்கள். மகளின் திருமணத்துக்காக சென்றிருந்த நேரத்தில் தொழில் அதிபர் வீட்டில் 25 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story