மத்திய பட்ஜெட்டில் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு முக்கியத்துவம்; மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேச்சு
மத்திய பட்ஜெட்டில் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
பெங்களூரு:
தொலைநோக்கு பார்வை
2022-23-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், பெங்களூருவில் கர்நாடக தொழில் வர்த்தக சபை நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். அப்போது அவர்கள் தங்களின் குறைகளை எடுத்து கூறினார். பட்ஜெட் குறித்து அவர்களின் கருத்துகளையும் நிர்மலா சீதாராமன் கேட்டறிந்தார். அப்போது அவர் பேசியதாவது:-
தொடர் வரி வருவாயை கணித்து அடுத்த 25 ஆண்டு காலத்திற்கு தொலைநோக்கு பார்வை கொண்ட பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளேன். தொலைநோக்கு பார்வை கொண்ட திட்டங்களுடன், அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் நோக்கத்தில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. இது நாம் பெருமை கொள்ளத்தக்க அம்சாக இருக்கும்.
கொரோனா பரவல்
இந்த பட்ஜெட்டில் டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் ஏராளமான தொழில்நுட்பங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. நாடு கொரோனா வைரஸ் நெருக்கடியில் இருந்து மீண்டு வருகிறது. இந்த நேரத்தில் சுகாதாரத்துறைக்கு உதவி தேவைப்படுகிறது. அந்த சுகாதாரத்துறை முறைப்படுத்தப்பட்டு பலப்படுத்தப்பட்டு உள்ளது. கொரோனா பரவல் காரமணாக குழந்தைகளின் 2 ஆண்டு கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. அதை சரிசெய்ய வேண்டும். அந்த கற்றலில் ஏற்பட்ட இடைவெளியை போக்க வேண்டியது அவசியம்.
மத்திய அரசு மேற்கொள்ளும் பணிகளில் மாநிலங்களின் பங்கேற்பையும் உறுதி செய்வதற்கு பட்ஜெட் முக்கியத்துவம் அளித்துள்ளது. இதன் மூலம் மாநிலங்களுக்கு வரி பங்கீடு கிடைக்கும். இதனால் மாநிலங்கள் உள்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்த முடியும். உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் செயல்படுத்தும் திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்பட ஒரு பரந்த கொள்கை வகுக்கப்படுகிறது.
தொழில் நிறுவனங்கள்
இதன் மூலம் பல மடங்கு பயன் கிடைக்கும். முதலீடுகள் வருகையும் அதிகரிக்கும். அந்த நோக்கத்தில் மத்திய அரசு கதி சக்தி திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இது பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைக்கும் ஒரு குடை போன்ற திட்டம் ஆகும். நாட்டின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் ஒரே குடையின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. தொழில்துறை பயனடையும் நோக்கத்தில் இது உருவாக்கப்பட்டுள்ளது.
பல்வே துறைகளில் அதாவது துறைமுகம், சாலைகள், பாலங்கள் அல்லது ரெயில்வே துறையில் செய்யப்படும் முதலீடுகள் ஒவ்வொரு துறையிலும் தொடர்பை ஏற்படுத்துவதாக உள்ளது. கதிசக்தி திட்டத்தின் கீழ் அவற்றை ஒருங்கிணைப்பதால் அது நமக்கு ஒட்டுமொத்த பலத்தை கொடுக்கிறது. சரக்குகளை சேகரித்து எடுத்து செல்வதற்கான வசதிகள் பற்றாக்குறையால் தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்படுகின்றன.
ஒருங்கிணைக்கிறோம்
அதனால் தான் அனைத்து வசதிகளும் ஒரே இடத்தில் கொண்டு வரப்படுகின்றன. அதாவது ஒரே குடையின் கீழ் முதலீடுகளை கதி சக்தி மூலம் ஒருங்கிணைக்கிறோம். அடுத்து இதே போன்ற கலந்துரையாடல் கூட்டம் அசாம் மாநிலத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு நிர்மலா சீதாரான் கூறினார்.
இந்த கூட்டத்தில் நிதித்துறை செயலாளர் சோமநாதன், வருவாய்த்துறை செயலாளர் தருண் பஜாஜ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story