‘தினத்தந்தி’ புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டி
x
தினத்தந்தி 8 March 2022 2:53 AM IST (Updated: 8 March 2022 2:53 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சாக்கடை கால்வாய் தூர்வாரப்படுமா?

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை நாராயண நகர் வெங்கடதாம்பட்டி சாலையில் உள்ள கழிவுநீர் கால்வாயில் கடந்த 10 நாட்களாக சாக்கடை கழிவுநீர் தேங்கி உள்ளது. இதனால் கொசு தொல்லை அதிகரித்து நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கால்வாயை தூர்வார சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஊர் பொதுமக்கள், நாராயண நகர், ஊத்தங்கரை.
---
தெருநாய்கள் தொல்லை

பெத்தநாயக்கன்பாளையம் 5-வது வார்டில் உள்ள பஞ்சமர் தெருவில் நாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. பள்ளிக்கு செல்லும் சிறுவர், சிறுமிகளை அவைகள் கடிக்க துரத்துகின்றன. இதனால் சிறுவர்கள் ஓடி செல்லும்போது கீழே விழுந்து காயம் அடைகின்றனர். மேலும் இரவில் ஆடு, மாடுகளையும் கடித்து விடுகின்றன. இந்த பிரச்சினைக்கு தக்க நடவடிக்கை எடு்த்து தெரு நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும். 

காமராசு, பஞ்சமர் தெரு, பெத்தநாயக்கன்பாளையம். 
===
அடிப்படை வசதி தேவை

எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம் வடவத்தூர் ஊராட்சி ஜம்புமடை  கிராமத்தில் சுடுகாடு உள்ளது. இங்கு மின்சாரம், குடிநீர் வசதிகள் உள்பட எவ்வித அடிப்படை வசதிகளும் கடந்த பல ஆண்டுகளாக இல்ைல. இதனால் பிணங்களை எரிக்க வருவோர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இதற்கு தீர்வுகாண வேண்டும்.

பொதுமக்கள், எருமப்பட்டி, நாமக்கல்.
===
சுகாதார சீர்கேடு

ஏற்காடு ஒன்றிய பகுதியில் சேகரிக்கப்படும் மக்கும், மக்காத குப்பைகள், ரசாயன கழிவுகள், மாமிச கழிவுகளை சேகரிக்கப்படுகின்றன. அவ்வாறு சேகரிக்கப்படு்ம் குப்பைகளை ஏற்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே கொட்டப்பட்டு எரிக்கப்படுகின்றன. அந்த பகுதியில் ஊராட்சி ஒன்றிய ெதாடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு படிக்கும் சிறுவர், சிறுமிகள், குப்பைகள் எரிக்கப்படுவதால் உடல் நலம் பாதிக்கப்படுகிறார்கள். மேலும் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது. இதுதவிர இந்த குப்பைமேட்டை சுற்றிலும் அரசு அலுவலகங்கள், வனத்துறை அலுவலகம், சுற்றுலா மாளிகை, தாவரவியல் பூங்கா, ரேஷன் கடை, அரசு கால்நடை மருத்துவமனை மற்றும் சுற்றுலா விடுதிகள் உள்ளன. எனவே இந்த பகுதியில் குப்பைகளை கொட்டுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிவன், முண்டகம்பாடி, ஏற்காடு.
===
வேகத்தடை தேவை

நாமக்கல்-மோகனூர் சாலையில் 3 கிலோ மீட்டர் தொலைவில் வகுரம்பட்டி பிரிவு சாலை உள்ளது. இந்த இடத்தில் 4 வழித்தடங்கள் உள்ளன. நான்கு புறமும் இருந்து வேகமாக வரும் வாகனங்களால் விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.  இந்த பகுதியில் வேகத்தடை அல்லது சாலையின் நடுவில் தடுப்புச் சுவர் அமைக்கும் பட்சத்தில் வாகன ஓட்டிகள், பொதுமக்களுக்கு பாதுகாப்பாக இருக்கும். இந்த பகுதியில் வேகத்தடை அமைக்க  அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

சா.விஜயன், சிங்கிலிபட்டி. நாமக்கல்.
===
மோசமான சாலை

சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டி ஊராட்சி வடுகப்பட்டியில் இருந்து தாதம்பட்டி சாலை வரையிலான சாலை மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. தார் சாலையாக இருந்தது, தற்போது மண் சாலையாக மாறியுள்ளது. வாகன ஓட்டிகள், பொதுமக்கள் இந்த சாலையில் மிகுந்த சிரமத்துடன் சென்று வருகிறார்கள். சம்பந்தப்பட்ட சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

ராசு, வடுகப்பட்டி, சேலம்.
===
சாக்கடை கால்வாய் அமைக்கலாமே!

தர்மபுரி தோக்கப்பட்டியில் சத்யா நகர் உள்ளது. இந்த பகுதியில் சாக்கடை கால்வாய் இல்லாததால் கழிவுநீர் சாலைகளில் செல்கிறது. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. இது குறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் பலனில்லை. இங்கு சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும்.
 
சிவா, தோக்கப்பட்டி, தர்மபுரி.
===


Next Story