கர்நாடகத்தில் மேகதாது அணையை கட்ட மத்திய அரசு அனுமதிக்கக்கூடாது-அன்புமணி ராமதாஸ் பேட்டி


கர்நாடகத்தில் மேகதாது அணையை கட்ட மத்திய அரசு அனுமதிக்கக்கூடாது-அன்புமணி ராமதாஸ் பேட்டி
x
தினத்தந்தி 8 March 2022 2:57 AM IST (Updated: 8 March 2022 2:57 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக மாநிலத்தில் மேகதாது அணையை கட்ட மத்திய அரசு அனுமதிக்கக்கூடாது என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

மேட்டூர்:
கர்நாடக மாநிலத்தில் மேகதாது அணையை கட்ட மத்திய அரசு அனுமதிக்கக்கூடாது என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.
டாக்டர் அன்புமணி ராமதாஸ்
சேலம் மாவட்டம் மேட்டூர் உபரி நீர் திட்டத்தை பார்வையிட பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் நேற்று மேட்டூருக்கு வந்தார். அவரை பா.ம.க. நிர்வாகிகள் வரவேற்றனர். தொடர்ந்து அவர் மேட்டூரை அடுத்த திப்பம்பட்டி பகுதியில் அமைந்துள்ள உபரிநீர் திட்ட நீரேற்று நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
இதன்பின்னர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மேட்டூர் உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என முதன் முதலில் குரல் கொடுத்தது பா.ம.க.தான். மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரில் 5 டி.எம்.சி. (1 டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) தண்ணீரை மட்டுமே நீரேற்று நிலையம் மூலம் எடுத்து சேலம் மாவட்டம் முழுவதும் கொடுக்க வேண்டும் என்பது எங்களது கோரிக்கை. முதல் கட்டமாக முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ.564 கோடி மதிப்பீட்டில் மேட்டூர் உபரிநீர் திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். இந்த திட்டம் இன்னும் முழுமை பெறவில்லை.
இந்த திட்டத்தை நிறுத்திவிடாமல் சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதி மக்களும் பயன்பெறும் வகையில் செயல்படுத்த தற்போதைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பனமரத்துப்பட்டி ஏரிக்கும் தண்ணீர் கொண்டு செல்ல வழிவகை செய்ய வேண்டும்.
அரசியல் திட்டம்
மேட்டூர் அணை அருகே உள்ள கோனூர் கிராமத்தை சேர்ந்த செக்கான் ஏரிக்கு தண்ணீரை எடுத்துச் செல்ல வேண்டும். மேட்டூர் அணை அருகே வசிக்கும் பொதுமக்கள் அணையில் உள்ள தண்ணீரை பார்க்கதான் முடிகிறதே தவிர பயன்படுத்த முடியவில்லை. மேட்டூர் உபரிநீர் திட்டத்தை மக்களின் வாழ்வாதாரத்திற்கு உரிய அடிப்படை திட்டமாக தான் பார்க்க வேண்டுமே, தவிர அரசியல் திட்டமாக பார்க்கக்கூடாது. இந்த திட்டத்தை முழுமையாக செயல்படுத்தினால் சேலம் மாவட்ட மக்களின் விவசாயம் செழிப்புற்று, குடிநீர் ஆதாரமும், நிலத்தடி நீர்மட்டமும் உயரும். 
இதனை செயல்படுத்த வலியுறுத்தி நாங்கள் போராட்டத்தை நடத்த தயாராக உள்ளோம். கட்சி பாகுபாடு இன்றி முதற்கட்டமாக 10 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கும் இயக்கத்தை தொடங்க உள்ளோம்.  பின்னர் அதனை முதல்-அமைச்சரை நேரில் சந்தித்து உபரிநீர் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வலியுறுத்துவோம். தொடர்ந்து மனிதச்சங்கிலி போராட்டம் என்று பல்வேறு போராட்டங்களை நடத்தி இந்த திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்துவோம்.
மேகதாது அணை
கர்நாடகத்தில் மேகதாது அணை கட்ட அனுமதிக்க கூடாது. மேகதாது அணை கட்டுவதற்காக கர்நாடக அரசு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் தொடர்பாக கர்நாடக காங்கிரசும், பா.ஜனதா கட்சியும் நாடகம் நடத்தி வருகிறது. மேகதாது அணை கொள்ளளவு 70 டி.எம்.சி. என வடிவமைக்கப்பட்டுள்ளது. 
ஏற்கனவே கர்நாடகத்தில் உள்ள ஆறு, ஏரி, அணை அனைத்தையும் சேர்த்தால் மொத்த கொள்ளளவு 224 டி.எம்.சி.ஆகும் தமிழகத்தை பொறுத்தவரை 93 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணை மட்டுமே உள்ளது. எனவே மேகதாது அணை கட்ட மத்திய அரசு ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. இதில் மத்திய அரசு நடுநிலையாக செயல்பட வேண்டும்.
மதுக்கடை பார்கள்
இதேபோன்று 6 மாதத்தில் மதுக்கடை பார்களை மூட வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த விஷயத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கனிமொழி எம்.பி. உள்பட தி.மு.க.வினர் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று கூறினார்கள். தமிழகத்தில் ஆட்சி அமைத்தவுடன் முதல் கையெழுத்திடுவார் என்று கூறினார்கள். இந்த விஷயத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது டாக்டர் அன்புமணி ராமதாசுடன் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, எம்.எல்.ஏ.க்கள் அருள், சதாசிவம், முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்தி, சேலம் மாவட்ட ஊராட்சி தலைவர் ரேவதி், பா.ம.க. மாவட்ட செயலாளர் ராஜசேகரன் மற்றும் பா.ம.க. நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
இதன்பின்னர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், சதாசிவம் எம்.எல்.ஏ.வின் வீட்டுக்கு சென்று, அவரது குடும்பத்தினரை சந்தித்து பேசினார்.

Next Story