இந்தியாவில் மருத்துவ படிப்பை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும்-உக்ரைனில் இருந்து திரும்பிய ஓமலூர் மாணவி பேட்டி
இந்தியாவில் மருத்துவ படிப்பை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உக்ரைனில் இருந்து திரும்பிய ஓமலூர் மாணவி இந்துஜா கூறினார்.
சேலம்:
இந்தியாவில் மருத்துவ படிப்பை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உக்ரைனில் இருந்து திரும்பிய ஓமலூர் மாணவி இந்துஜா கூறினார்.
ஓமலூர் மாணவி
ஓமலூர் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி. இவருடைய மகள் இந்துஜா. இவர், மருத்துவ படிப்பிற்காக உக்ரைன் நாட்டிற்கு சென்றார். அங்கு மேற்கு பகுதியில் உள்ள உஸ்கரா மருத்துவக்கல்லூரியில் படித்து வந்தார். இந்த நிலையில், தற்போது உக்ரைனில் போர் நடந்து வருவதால் அங்கு மருத்துவம் படிக்கும் இந்திய மாணவ, மாணவிகள் தாயகம் திரும்பி வருகிறார்கள்.
அதன்படி உக்ரைன் நாட்டில் மருத்துவக்கல்லூரியில் படித்து வந்த ஓமலூரை சேர்ந்த இந்துஜா தமிழக அரசின் உதவியுடன் நேற்று சேலம் திரும்பினார். அப்போது, மாணவியை பார்த்தவுடன் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கலெக்டருடன் சந்திப்பு
இதைத்தொடர்ந்து மாணவி இந்துஜா நேற்று தனது பெற்றோருடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து கலெக்டர் கார்மேகத்தை சந்தித்தார். அப்போது, உக்ரைனில் இருந்து தாயகம் திரும்புவதற்கு மத்திய, மாநில அரசுகள் உதவியதற்கு நன்றிகளை தெரிவித்துக்கொண்டார். அதற்கு உக்ரைன்-ரஷியா இடையே நடக்கும் போர் மத்தியில் மிகவும் பாதுகாப்பாக தாயகம் திரும்பியதற்காக மாணவிக்கு கலெக்டர் கார்மேகம் வாழ்த்துகளை தெரிவித்தார்.
இது குறித்து மாணவி இந்துஜா நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி
உக்ரைன் நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள மருத்துவக்கல்லூரியில் படித்து வருகிறேன். எங்களது கல்லூரியில் 1,700 மாணவர்கள் உள்ளனர். உக்ரைனில் போர் நடப்பதால் எப்படி தாயகம் திரும்ப போகிறோம் என்று அச்சம் ஏற்பட்டது. ஆனால் மத்திய, மாநில அரசுகளின் முயற்சியால் நாடு திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது. சுமி கார்கிவ் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான மருத்துவ மாணவ, மாணவிகள் சிரமப்பட்டு வருகின்றனர். அவர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போரினால் நாங்கள் அச்சத்துடன் வாழ்ந்து வந்த நிலையில், மத்திய, மாநில அரசுகள் பெரிய உதவி செய்து எங்களை தாயகம் அழைத்து வந்ததற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எங்களால் மருத்துவ படிப்பிற்கு மீண்டும் உக்ரைன் நாட்டிற்கு செல்ல முடியுமா? என்ற சந்தேகம் உள்ளது. எனவே, இந்தியாவிலேயே எங்களுடைய மருத்துவ படிப்பை தொடர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதே போல உக்ரைனில் இருந்து திரும்பிய சேலத்தை சேர்ந்த கே.பூஜியா என்ற மாணவியும் கலெக்டர் கார்மேகத்தை சந்தித்து நன்றி தெரிவித்தார்.
Related Tags :
Next Story