சட்டமன்ற பொது நிறுவனங்கள் குழு இன்று சேலம் வருகை-2 நாட்கள் ஆய்வு செய்கிறார்கள்
சேலத்துக்கு இன்று சட்டமன்ற பொது நிறுவனங்கள் குழு வருகிறது. இந்த குழுவினர் மாவட்டத்தில் 2 நாட்கள் பல்வேறு இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்கின்றனர்.
சேலம்:
சேலத்துக்கு இன்று சட்டமன்ற பொது நிறுவனங்கள் குழு வருகிறது. இந்த குழுவினர் மாவட்டத்தில் 2 நாட்கள் பல்வேறு இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்கின்றனர்.
பொது நிறுவனங்கள் குழு
தமிழகத்தில் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தாம்பரம் தொகுதி எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில், சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்களின் உறுப்பினரும், மதிப்பீட்டுக்குழு தலைவருமான டி.ஆர்.பி.ராஜா, பொது கணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை மற்றும் எம்.எல்.ஏ.க்கள் அரவிந்த் ரமேஷ், அருண்மொழி தேவன், இசக்கி சுப்பையா, காதர் பாட்ஷா, முத்துராமலிங்கம், கிருஷ்ணசாமி, செல்வராஜ், சேகர், தமிழரசி, தளபதி, நாகை மாலி, நிவேதா முருகன், பாலாஜி, மகேந்திரன், ரூபி மனோகரன் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
2 நாட்கள் ஆய்வு
இந்த பொது நிறுவனங்களின் குழுவினர் இன்று (செவ்வாய்க்கிழமை) சேலம் மாவட்டத்திற்கு வருகை தந்து 2 நாட்கள் பல்வேறு ஆய்வு பணிகளை மேற்கொள்ள உள்ளனர். இன்று காலை 10.15 மணிக்கு சேலம் அரசு சுற்றுலா மாளிகையில் இக்குழு கூடுகிறது.
தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளில் மாசு கட்டுப்பாட்டு வாரிய நடவடிக்கைகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. மதியம் 12 மணிக்கு மேட்டூருக்கு செல்லும் அக்குழுவினர் அங்கு அனல் மின் நிலையத்தையும், அதன்பிறகு மேட்டூர் அணையையும் பார்வையிடுகின்றனர். பின்னர் அங்கிருந்து ஏற்காட்டுக்கு சென்று குழுவினர் ஓய்வு எடுக்கிறார்கள்.
ஏற்காட்டில் ஆய்வுக்கூட்டம்
ஏற்காட்டில் நாளை (புதன்கிழமை) காலை சுற்றுலா வளர்ச்சி கழகம் குறித்த கள ஆய்வும், ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டமும் நடைபெறுகிறது. இதையடுத்து பிற்பகல் 3 மணிக்கு சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பொதுத்துறைகளின் தணிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடுகின்றனர். அதன்பிறகு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம், மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமையில் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story