மாட்டுச் சந்தைக்கு அடிப்படை வசதிகள் செய்துதரப்படுமா


மாட்டுச் சந்தைக்கு அடிப்படை வசதிகள் செய்துதரப்படுமா
x
தினத்தந்தி 8 March 2022 4:03 PM IST (Updated: 8 March 2022 4:03 PM IST)
t-max-icont-min-icon

மாட்டுச் சந்தைக்கு அடிப்படை வசதிகள் செய்துதரப்படுமா

நாட்டின் முதுகெழும்பு விவசாயம் ஆகும். அந்த விவசாய தொழிலின் முதுகெழும்பாக விளங்குவது கால்நடைகள் என்பது யாராலும் மறுக்க முடியாத விஷயம். திருப்பூர் மாவட்டத்தை பொறுத்த வரை மாநகரில் பின்னலாடை உள்ளிட்ட தொழில்கள் சிறந்து விளங்கினாலும், புறநகர் பகுதிகளில் அதிகளவு விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. மழையளவு குறைந்த, நீர்நிலைகள் போதிய அளவில் இல்லாத திருப்பூர் மாவட்டத்தில் விவசாயம் மிகப்பெரிய சவாலான தொழிலாகவே கருதப்படுகிறது. 
பெரும்பாலும் மழை, பாசனநீர் பற்றாக்குறை, கால நிலை மாற்றம் உள்ளிட்டவைகளால் விவசாயிகள் ஆண்டுதோறும் நஷ்டத்தை சந்தித்து வந்தாலும், அவர்களது விடாமுயற்சியாக தொடர்ந்து விவசாய தொழிலை செய்து வருகின்றனர். அதற்கு முக்கிய காரணமாக இருப்பது கால்நடைகள் என்றே சொல்லலாம். விவசாயத்தில் போதிய வருவாய் ஈட்ட இயலாத நிலையில் அதை ஈடுகட்டுவதாக கால்நடை வளர்ப்பு உள்ளது.
மாட்டுச் சந்தைகள்
அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தில் குன்னத்தூர், திருப்பூரில் மாட்டுச் சந்தைகள் வாரந்தோறும் நடைபெறுவது வழக்கம். மிகவும் பிரசித்தி பெற்ற இந்த சந்தைகளுக்கு தமிழகத்தின் பல்ேவறு பகுதிகள், கேரளா உள்ளிட்ட வெளிமாநிலத்தை சோ்ந்த கால்நடை வியாபாரிகளும், மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து விவசாயிகளும் கால்நடைகளை விற்க, வாங்க  வந்து செல்கின்றனர். இந்த 2 வாரச்சந்தைகளிலும் வாரம் தோறும் ஆயிரக்கணக்கான மாடுகள் விற்பனை செய்யப்பட்டு, பல கோடி ரூபாய்க்கு வியாபாரம் நடைபெறுவது வழக்கம். 
இந்த நிலையில் திருப்பூர் பல்லடம் ரோடு, தென்னம்பாளையம் காய்கறி மார்க்கெட் பகுதியில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் நடைபெறும் இந்த மாட்டுச்சந்தை கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக திருப்பூர் தாராபுரம் ரோடு, அமராவதிபாளையத்துக்கு சில மாதங்களுக்கு முன்பு இடமாற்றம் செய்யப்பட்டது. தொடர்ந்து அங்கேயே வாரந்தோறும் நடைபெற்று வரும் இந்த சந்தை வளாகத்தில் கூடுதல் விரிவாக்கப்பணிகளை மேற்கொள்ள வேண்டும், அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகளும், வியாபாரிகளும் வலியுறுத்தி வருகின்றனர்.
அடிப்படை வசதி 
இந்த மாட்டுச்சந்தைக்கு கிர் இன பசு, காங்கேயம் இன காளை, பசு, நாட்டு மாடு உள்ளிட்ட வகைகளும், காளைகள், கன்றுகள், பசுக்கள் என அனைத்து வகையான மாடுகளும் சராசரியாக வாரந்தோறும் 500 மாடுகள் வரை விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த மாடுகளை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள், விவசாயிகள் வாங்கிச் செல்கின்றனர். கோடிக்கணக்கான ரூபாய்க்கு வியாபாரம் நடைபெறும் இந்த சந்தையில் போதிய அடிப்படை வசதிகளே செய்யப்படவில்லை.
 குறிப்பாக வந்து செல்லும் விவசாயிகள், வியாபாரிகளுக்கு போதிய குடிநீர் வசதி கூட செய்யப்படவில்லை என்பது மிகவும் பரிதாபமான விசயமாக உள்ளது. மேலும், கழிப்பறை, வாகன நிறுத்துமிடம், வாகனங்கள் வந்து செல்வதற்கான இடவசதி, போதிய கடைகள் அமைக்க வேண்டும், உரிய முறையில் சுகாதாரத்தை பேணிக்காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விற்பனைக்கு கொண்டு வரும் மாடுகளுக்கு தண்ணீர் வசதி, மாடுகளை ஏற்றி இறக்க போதிய தளம் அமைப்பது, திடீரென மாடுகளுக்கு ஏற்படும், காயம், உடல்நலக்குறைபாடுகளை கண்காணிக்க கால்நடை மருத்துவ குழு உள்ளிட்டவைகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். 
இந்த வாரம் நடந்த வாரச்சந்தைக்கு காளைகள், மாடுகள், கன்றுகள் என சுமார் 500 வரை விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. கன்றுகள் சுமார் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.14 ஆயிரம் வரையும், காளைகள், மாடுகள் சுமார் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரையும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வாரந்தோறும் கோடிக்கணக்கான ரூபாய்க்கு வியாபாரம் நடைபெறும் இந்த சந்தைக்கு கூடுதல் வசதிகள் செய்து தர வேண்டும், கால்நடைகள், விவசாயிகள், வியாபாரிகளுக்கு போதிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி, கூடுதல் விரிவாக்க பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Next Story