நீர் மேலாண்மை முறைப்படுத்தப்படுமா
நீர் மேலாண்மை முறைப்படுத்தப்படுமா
உடுமலையை அடுத்த திருமூர்த்தி அணையை ஆதாரமாகக்கொண்டு கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள், பி.ஏ.பி. தொகுப்பு அணைகளில் இருந்து காண்டூர் கால்வாய் மூலம் பெறப்படுகின்ற நீராதாரத்தை அடிப்படையாகக்கொண்டு ஆண்டுக்கு 2 மண்டலங்கள் வீதம் சுழற்சி முறையில் 4 மண்டலங்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் முதலாம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதைத்தொடர்ந்து விவசாயிகள் மக்காச்சோளம், உளுந்து, பாசிப்பயிறு மற்றும் காய்கறிகள் சாகுபடியில் தீவிரம் காட்டினார்கள். தற்போது 3-ம் சுற்று தண்ணீர் நிறைவடையும் தருவாயில் உள்ளது. ஆனால் கடந்த சில நாட்களாக நிலவிய வெப்பத்தின் தாக்குதல் காரணமாக சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் கருகும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது
தண்ணீர் பற்றாக்குறை
பி.ஏ.பி. பாசனத்திட்டத்தை அடிப்படையாகக்கொண்டு சாகுபடி பணியில் ஈடுபட்டு வருகின்றோம். ஆனால் முறையற்ற நீர் மேலாண்மை, கால்வாய் பராமரிப்பு இல்லாதது, தண்ணீர் திருட்டு போன்ற காரணங்களால் தேவையான அளவு தண்ணீர் கிடைப்பதில்லை. இதனால் கடைமடை நிலங்களுக்கும் சாகுபடி செய்யப்பட்ட பயிர்களுக்கும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. ஒரு மாதத்திற்கு ஒருமுறை ஒரு சுற்று தண்ணீர் வழங்கப்படுவதால் தரிசு நிலத்தில் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பயிர்களை காப்பாற்ற முடியாமல் திணறி வருகின்றனர். கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணறுகளை கொண்ட விவசாயிகள் தண்ணீர் பற்றாக்குறையை சமாளித்து விடுகின்றனர். இது குறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
கூடுதல் விளைச்சல்
பி.ஏ..பி பாசனத்திட்டத்தில் உள்ள விளைநிலங்கள் வீட்டுமனைகள், காற்றாலை அமைத்தல் உள்ளிட்ட பயன்பாட்டுக்காக விற்பனை செய்யப்பட்டு உள்ளது. அதை ஆயக்கட்டில் இருந்து நீக்கினால் தற்போது வழங்கப்படுகின்ற 5 சுற்றுகளுடன் சேர்த்து கூடுதலாக 5 சுற்றுகள் தண்ணீர் வழங்க முடியும். இதனால் 7 நாள் அடைப்பு 7 நாள் திறப்பு என்ற முறையில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதையும் தடுக்கலாம். பயிர்களும் நல்ல முறையில் வளர்ந்து கூடுதல் விளைச்சலை அளிக்கும். ஆனால் அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக பி.ஏ.பி. திட்டம் கேள்விக்குறியாவதுடன் விவசாயிகளும் தொடர்ந்து நஷ்டமடைந்து வருவதுடன் தொழிலை கைவிடும் சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் நேரடியாக ஆய்வு செய்து தண்ணீர் திருட்டை தடுப்பதுடன் கடைமடை வரை தண்ணீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் நீர் மேலாண்மையை முறைப்படுத்தி கூடுதல் தண்ணீரை வழங்குவதற்கு முன்வர வேண்டும். இதனால் விவசாயம் வளர்ச்சிப்பாதைக்கு திரும்பவதுடன் விவசாயிகளின் வாழ்வாதாரமும் உயரும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story