தூத்துக்குடி மாவட்டத்தில் பலத்த மழை; உப்பளங்கள் தண்ணீரில் மூழ்கின
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று(புதன்கிழமை) பெய்த பலத்த மழையால் உப்பளங்கள் தண்ணீரில் மூழ்கின
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதையொட்டி உப்பளங்கள் தண்ணீரில் மூழ்கின. தற்காலிக பஸ் நிலையத்தில் தேங்கிய நீரால் பயணிகள் அவதி அடைந்தனர்.
பரவலாக மழை
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் மக்களை வாட்டியது. இந்த நிலையில் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 2 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
அதன்படி, நேற்று காலையில் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு 2.30 மணி முதல் நேற்று அதிகாலை 5 மணி வரை மழை பெய்தது.
பயணிகள் அவதி
இந்த மழை காரணமாக நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. பாளையங்கோட்டை ரோடு உள்ளிட்ட முக்கிய சாலைகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி நின்றதால் காலை நேரத்தில் வேலைக்கு செல்வோர் மற்றும் பள்ளிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டனர். தூத்துக்குடி தற்காலிக பஸ் நிலையத்திலும் மழைநீர் தேங்கியதால் பயணிகள் அவதிப்பட்டனர்.
மேலும் இந்த திடீர் மழை காரணமாக மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த வெப்பம் சற்று தணிந்தது.
உப்பளங்கள் தண்ணீரில் மூழ்கின
தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம், முள்ளக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று அதிகாலை சுமார் 3 மணி நேரம் பரவலாக பலத்த மழை பெய்தது. முத்தையாபுரம், முள்ளக்காடு கோவளம், மதகிரி பகுதிகளில் பெய்த மழையால் அங்குள்ள உப்பள பாத்திகளில் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது இதனால் உப்பு உற்பத்தி முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து முள்ளகாட்டைச் சேர்ந்த உப்பு உற்பத்தியாளர் குமார் (வயது 50) கூறுகையில், ‘கடந்த மழைக் காலத்திற்கு பிறகு தற்போது தான் புதிதாக உப்பு உற்பத்தி தொடங்கினோம். அதற்குள் எதிர்பாராதவிதமாக பெய்த மழையால் உப்பு உற்பத்தி முற்றிலும் தடைபட்டுள்ளது, மீண்டும் உப்பு உற்பத்தி செய்ய குறைந்தபட்சம் 15 நாட்களுக்கும் மேல் ஆகும்’ என்று தெரிவித்தார்.
இதேபோல் திருச்செந்தூர், ஆறுமுகநேரி, ஆத்தூர், காயல்பட்டினம் பகுதியிலும் நேற்று காலை 7 மணிக்கு பலத்த மழை கொட்டியது. சுமார் 2 மணி நேரம் நீடித்த இந்த மழையால் சாலைகள், தெருக்களில் தண்ணீர் ஆறாக ஓடியது.
மழை அளவு
மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை திருச்செந்தூரில் 19 மில்லி மீட்டர் மழையும், தூத்துக்குடியில் 18 மில்லி மீட்டரும், காயல்பட்டினத்தில் 2 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.
Related Tags :
Next Story