தூத்துக்குடியில் குடோனில் பதுக்கிய 30 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
தூத்துக்குடியில் குடோனில் பதுக்கிய 30 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் குடோனில் பதுக்கி வைத்திருந்த 30 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதில் தொடர்புடைய 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சோதனை
தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து ரேஷன் அரிசி அவ்வப்போது கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுப்பதற்காக போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மாப்பிள்ளையூரணி பகுதியில் உள்ள ஒரு குடோனில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவரது தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட குடோனுக்கு சென்று திடீர் சோதனை நடத்தினர்.
30 டன் ரேஷன் அரிசி
அப்போது, அங்கு ஏராளமான மூட்டைகளில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. அதில் தலா 50 கிலோ எடை கொண்ட 600 மூட்டைகளில் சுமார் 30 டன் ரேஷன் அரிசி இருந்தது. அதனை லாரிகள் மூலம் கேரளாவுக்கு கடத்த முயன்றதாக கூறப்படுகிறது.
உடனடியாக போலீசார் அங்கு இருந்த 30 டன் ரேஷன் அரிசி மற்றும் 2 மினி வேன், 2 லோடு ஆட்டோ, ஒரு லாரி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக தூத்துக்குடி டூவிபுரத்தை சேர்ந்த தவசிமணி உள்பட 2 பேரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து பிடிபட்டவர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி, வாகனங்கள் ஆகியவற்றை குடிமைப் பொருள் குற்ற புலனாய்வு பிரிவு போலீசிடம் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story