ஊட்டி அணைகளில் நீர்மட்டம் குறைந்தது


ஊட்டி அணைகளில் நீர்மட்டம் குறைந்தது
x
தினத்தந்தி 8 March 2022 8:49 PM IST (Updated: 8 March 2022 8:49 PM IST)
t-max-icont-min-icon

ஊட்டி நகருக்கு குடிநீர் வழங்கும் அணைகளில் நீர்மட்டம் குறைந்து உள்ளது. இருப்பினும் கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்று அதிகாரி தெரிவித்தார்

ஊட்டி

ஊட்டி நகருக்கு குடிநீர் வழங்கும் அணைகளில் நீர்மட்டம் குறைந்து உள்ளது. இருப்பினும் கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்று அதிகாரி தெரிவித்தார்.

10 அணைகள் 

நீலகிரி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் முதல் உறைபனி தாக்கம் நிலவியது. குளிர்காலத்தில் நீர் பனி, உறைபனி அதிகமாக காணப்பட்டது. போதுமான அளவு மழை பெய்யவில்லை. இதனால் ஊட்டி நகருக்கு குடிநீர் வழங்கும் அணைகளில் நீர்மட்டம் குறைந்து உள்ளது. 

ஊட்டியில் பார்சன்ஸ்வேலி, மார்லிமந்து, டைகர்ஹில், கோரிசோலா, தொட்டபெட்டா அப்பர் உள்பட 10 அணைகள் உள்ளன. சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகிப்பதில் பார்சன்ஸ்வேலி அணை முக்கியமானதாக உள்ளது. இந்த அணை நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.

நீர்மட்டம் குறைந்தது

ஊட்டி பார்சன்ஸ்வேலி அணையின் மொத்த கொள்ளளவான 50 அடியில் 26.30 அடியாக நீர்மட்டம் குறைந்து உள்ளது. கடந்த ஆண்டு இதே நேரத்தில் 40.90 அடியாக நீர்மட்டம் இருந்தது. 23 அடி கொள்ளளவு கொண்ட மார்லிமந்து அணை நீர்மட்டம் 14 அடியாகவும், மொத்த கொள்ளளவான கோரிசோலா அணையின் 35 அடியில் நீர்மட்டம் 16 அடியாகவும் குறைந்தது. 

31 அடி கொள்ளளவு கொண்ட தொட்டபெட்டா அப்பர் அணையின் நீர்மட்டம் 20 அடியாக குறைந்து இருக்கிறது. டைகர்ஹில் அணை 39 அடி கொள்ளளவில் 37 அடியாக நீர்மட்டம் அதிகமாக உள்ளது. கோடப்பமந்து அப்பர், தொட்டபெட்டா லோயர், கிளன்ராக் உள்ளிட்ட 5 சிறிய அணைகளில் போதுமான இருப்பு இருக்கிறது. 

குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது

ஊட்டி பார்சன்ஸ் வேலி அணையில் இருந்து தினமும் 10 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது. தங்கும் விடுதிகள், குடியிருப்புகளுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. 

இதுகுறித்து ஊட்டி நகராட்சி பொறியாளர் இளங்கோவன் கூறும்போது, ஊட்டி அணைகளில் நீர்மட்டம் போதுமான அளவு இருப்பதால் கோடை யில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது. ஊட்டி நகராட்சியில் அனைத்து பகுதிகளுக்கும் ஒருநாள் விட்டு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. 

இதற்காக அணைகளில் இருந்து தினமும் 10 லட்சத்து 61 ஆயிரம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது என்றார்.


Next Story