போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட தனியார் நிறுவன ஊழியர்கள்


போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட தனியார் நிறுவன ஊழியர்கள்
x
தினத்தந்தி 8 March 2022 9:19 PM IST (Updated: 8 March 2022 9:19 PM IST)
t-max-icont-min-icon

வத்தலக்குண்டு போலீஸ் நிலையத்தை தனியார் நிறுவன ஊழியர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்

வத்தலக்குண்டு;
வத்தலக்குண்டு அருகே உள்ள பழைய வத்தலக்குண்டுவில் ஒரு தனியார் நிறுவனம் செயல்பட்டது. இந்த நிறுவனம் சார்பில் நேர்முக தேர்வு நடத்தப்பட்டு 200 பேர் வேலைக்கு சேர்ந்தனர். அவர்களுக்கு ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. 

மேலும் வேலைக்கு சேர்ந்தவர்களிடம் முன்பணமாக தலா ரூ.50 ஆயிரம் பெறப்பட்டது.இதையடுத்து நிறுவனத்தினர் வேலைக்கு சேர்ந்தவர்களிடம், சிறுசேமிப்பு பரிசு திட்டத்தில் பொதுமக்களை சேர்க்குமாறு கூறினர். அதன்படி ஊழியர்கள், 6 ஆயிரத்து 500 பேரிடம் தலா ரூ.2 ஆயிரம் வீதம் பெற்று சிறுசேமிப்பு திட்டத்தில் சேர்த்தனர். அதில் 500 பேருக்கு மட்டுமே 2 கிராம் தங்ககாசு, குளிர்சாதன பெட்டி, கலர் டி.வி. உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டது. 

மீதமுள்ளவர்களுக்கு பரிசு வழங்கவில்லை. மேலும் ஊழியர்களுக்கும் சம்பளம் தரப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ஊழியர்கள் தனியார் நிறுவன இயக்குனருடன் வாக்குவாதம் செய்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிறுவன இயக்குனர் திடீரென மாயமாகி விட்டார். அவர் பொதுமக்கள் மற்றும் ஊழியர்களிடம் சுமார் ரூ.2 கோடி வரை மோசடி செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து தனியார் நிறுவன ஊழியர்கள் 25-க்கும் மேற்பட்டோர் நேற்று வத்தலக்குண்டு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகனிடம் புகார் மனு ெகாடுத்தனர். அதில் தனியார் நிறுவன இயக்குனரை கைது செய்து அவரிடம் இருந்து பணத்தை திரும்ப பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


பின்னர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட தனியார் நிறுவன ஊழியர்கள் திண்டுக்கல் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் மனு கொடுத்தனர்.

Next Story