பள்ளிப்பட்டில் கரும்பு தோட்டத்தில் புகுந்து யானைகள் அட்டகாசம்
பள்ளிப்பட்டில் கரும்பு தோட்டத்தில் புகுந்து யானைகள் அட்டகாசம் செய்வதையடுத்து ஆந்திர வனப்பகுதிக்கு விரட்ட வனத்துறையினர் போராடி வருகின்றனர்.
கரும்பு தோட்டத்தில் யானைகள்
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதி ஆந்திர மாநில எல்லையையொட்டி உள்ளது. இதனால் ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு செம்மரக்கட்டைகள் கடத்துபவர்கள் மிகவும் சுலபமாக நுழைந்து விடுகின்றனர். அதேபோல் ஆந்திர மாநில வனப்பகுதியில் சுற்றிக்கொண்டிருந்த 3 யானைகள் தமிழக பகுதியான பள்ளிப்பட்டு தாலுகா குமாரமங்கலம் பக்கத்தில் உள்ள சத்திரவாடா கிராமத்தில் சுற்றிக்கொண்டிருக்கின்றன.
இந்த யானைகள் நேற்று முன்தினம் பள்ளிப்பட்டு தாலுகா கொல்லாலகுப்பம் மலைப்பகுதியில் சுற்றிக்கொண்டிருந்தன. இந்த யானைகளை ஆந்திர மாநில வனப்பகுதிக்கு விரட்ட பள்ளிப்பட்டு வனத்துறை அலுவலர் சரவணன் தலைமையில் வனத்துறையினர் நேற்று முன்தினம் இரவு முழுவதும் விழித்திருந்து விரட்டினார்கள். இருப்பினும் விரட்ட முடியவில்லை. நேற்று காலை இந்த யானைகள் பள்ளிப்பட்டு பேரூராட்சியை சேர்ந்த ஈச்சம்பாடி பகுதியில் உள்ள கரும்பு தோட்டத்திற்குள் புகுந்தது. இந்த யானைகள் கூட்டத்தில் 3 யானைகள் உள்ளன. இவற்றை டிரோன் மூலம் வனத்துறையினர் கண்டறிந்தனர்.
கிராம மக்கள் பீதி
இந்த பகுதியில் ராமச்சந்திராபுரம் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் ரவி, லோகநாதன், ஈச்சம்பாடி கிராமத்தை சேர்ந்த முரளி ஆகியோரது கரும்பு தோட்டத்திற்குள் புகுந்த இந்த 3 யானைகள் அங்கு உள்ள கரும்புகளை மிதித்து நாசம் செய்தன. கரும்புதோட்டத்தை சுற்றி வனத்துறையினர் பட்டாசுகளை வெடித்து டமாரங்களை ஒலிக்க செய்து யானைகளை கரும்பு தோட்டத்தில் இருந்து விரட்ட போராடி வருகின்றனர். ஆனால் அந்த 3 யானைகள் கரும்பு தோட்டத்தில் சுற்றி கொண்டிருக்கின்றன. இதனால் யானைகளை விரட்ட முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர். கரும்பு தோட்டத்திற்குள் யானைகள் புகுந்து இருப்பதால் இரவு நேரத்தில் தங்கள் கிராமங்களுக்கு வந்து விடுமோ என்று பள்ளிப்பட்டு சுற்றியுள்ள கிராம மக்கள் பீதியில் உள்ளனர். இந்த சம்பவம் பள்ளிப்பட்டு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வனத்துறையினருடன் சேர்ந்து போலீசார் மற்றும் வருவாய்த் துறையினரும் அந்த கரும்புத் தோட்டங்கள் அருகே கண்காணித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story