மந்திரி ஆதித்ய தாக்கரேக்கு நெருக்கமானவரிடம் அதிரடி சோதனை- வருமான வரித்துறை நடவடிக்கை
மந்திரி ஆதித்ய தாக்கரே மற்றும் மந்திரி அனில் பரப்பிற்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
மும்பை,
மந்திரி ஆதித்ய தாக்கரே மற்றும் மந்திரி அனில் பரப்பிற்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
அதிரடிகள்
மராட்டியத்தில் சிவசேனா தலைமையில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு நடந்து வருகிறது. இந்தநிலையில் மராட்டிய ஆளும் கட்சியினர் மீது மத்திய விசாரணை முகமைகள் அவ்வப்போது நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு பதிலடியாக பா.ஜனதாவினர் மீது மராட்டிய போலீசார் கைது போன்ற நடவடிக்கைளில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய மந்திரி நாராயண் ரானே கூட கைது செய்யப்பட்டு இருந்தார்.
இந்த பரபரப்புக்கு மத்தியில் சமீபத்தில் மும்பை மாநகராட்சி நிலைக்குழு தலைவர் யஸ்வந்த் ஜாதவ் வீடு மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
மேலும் இந்த சோதனையின் போது யஸ்வந்த் ஜாதவ் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டது தெரியவந்து உள்ளதாக வருமான வரித்துறை கூறியிருந்தது.
மந்திரி ஆதித்ய தாக்கரே
இந்தநிலையில் வருமான வரித்துறையினர் நேற்று கேபிள் தொழில் அதிபர் சதானந்த் கதம் மற்றும் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வரும் ராகுல் கனால், போக்குவரத்து துறை அதிகாரி பாஜ்ரங் கார்மதே ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர். இதில் சதானந்த் கதம், பஜ்ரங் கார்மமே மந்திரி அனில் பரப்பிற்கு நெருக்கமானவர் என கூறப்படுகிறது.
இதேபோல சிவசேனா இளைஞர் அணி செயற்குழு உறுப்பினரான ராகுல் கனால் மந்திரி ஆதித்ய தாக்கரேவுக்கு நெருக்கமானவர் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஆதித்ய தாக்கரே, அனில் பரப்பிற்கு நெருக்கமானவர்கள் இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி இருப்பது மராட்டிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
----
Related Tags :
Next Story