நத்தம் மாரியம்மன் கோவில் மாசி திருவிழாவில் காப்பு கட்டி பக்தர்கள் விரதம்


நத்தம் மாரியம்மன் கோவில் மாசி திருவிழாவில் காப்பு கட்டி பக்தர்கள் விரதம்
x
தினத்தந்தி 8 March 2022 9:51 PM IST (Updated: 8 March 2022 9:51 PM IST)
t-max-icont-min-icon

நத்தம் மாரியம்மன் கோவில் மாசி திருவிழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் தொடங்கினர்

நத்தம்:
மாரியம்மன் கோவில்
பிரசித்தி பெற்ற நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழா, கொடியேற்றத்துடன் நேற்று முன்தினம் தொடங்கியது. இதைத்தொடர்ந்து நேற்று அதிகாலையில் பக்தர்கள் உலுப்பக்குடி அருகே உள்ள கரந்தமலை கன்னிமார் கோவில் தீர்த்தத்தில் புனித நீராடினர். 

பின்னர் அவர்கள் மஞ்சள் ஆடை அணிந்து, அங்கிருந்து புனித தீர்த்தக்குடங்கள் எடுத்து வந்து சந்தன கருப்பு கோவிலில் சேர்ந்தனர். இதையடுத்து அங்கிருந்து மேளதாளம் முழங்க வர்ணக் குடைகள், தீவட்டி பரிவாரங்களுடன் பக்தர்கள் கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். 
தீர்த்தக்குடங்களை தலையில் சுமந்தபடி, மஞ்சள் ஆடை அணிந்த நிலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாரியம்மன் கோவிலை சென்றடைந்தனர். 
காப்பு கட்டினர்
பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. இதைத்தொடர்ந்து ஏராளமான பக்தர்கள், மஞ்சள் காப்பு கட்டி 15 நாள் விரதத்தை தொடங்கினர். இரவு 9 மணிக்கு அம்மன் குளத்தில் இருந்து கம்பம் நகர்வலமாக கொண்டு வரப்பட்டு கோவிலில் நிலை நிறுத்தப்பட்டது.

விழாவையொட்டி வருகிற 11, 15, 18-ந்தேதிகளில் அம்மன் சர்வ அலங்காரத்தில் மயில், சிம்மம், அன்ன வாகனத்தில் எழுந்தருளி மின்ரதத்தில் ஊர்வலமாக நத்தத்தின் முக்கிய வீதிகளில் நகர்வலம் செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. 22-ந்தேதி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கழுமரம் ஏறுதல் நிகழ்ச்சியும், பக்தர்கள் பூக்குழி இறங்குதலும் நடக்கிறது. 


விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், கோவில் பூசாரிகள் உள்ளிட்ட விழாக்குழுவினர் செய்து வருகின்றனர். சுகாதார பணி, குடிநீர் வசதிகளை பேரூராட்சி தலைவர் சேக்சிக்கந்தர்பாட்சா மேற்பார்வையில், செயல் அலுவலர் சரவணக்குமார், துப்புரவு ஆய்வாளர் செல்வி மேரி உள்ளிட்ட பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகளை திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜமுரளி, சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் செய்துள்ளனர்

Next Story