தமிழகத்தில் முதல் முறையாக தர்மபுரி நீதிமன்ற வளாகத்தில் தாய்மார்கள் பாலூட்டும் அறை மாவட்ட முதன்மை நீதிபதி திலகம் திறந்து வைத்தார்
உலக மகளிர் தின விழாவையொட்டி தமிழகத்தில் முதல் முறையாக தர்மபுரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தாய்மார்கள் பாலூட்டும் அறையை மாவட்ட முதன்மை நீதிபதி திலகம் திறந்து வைத்தார்.
தர்மபுரி:
உலக மகளிர் தின விழாவையொட்டி தமிழகத்தில் முதல் முறையாக தர்மபுரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தாய்மார்கள் பாலூட்டும் அறையை மாவட்ட முதன்மை நீதிபதி திலகம் திறந்து வைத்தார்.
பாலூட்டும் அறை
தர்மபுரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உலக மகளிர் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, மாவட்ட நீதிமன்ற நிர்வாகம் ஆகியவற்றின் சார்பில் அமைக்கப்பட்ட தாய்மார்கள் பாலூட்டும் அறையை மாவட்ட முதன்மை நீதிபதி திலகம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
அப்போது அவர் கூறுகையில், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு வந்து செல்பவர்களில் குழந்தைகளுடன் வரும் தாய்மார்கள் பாலூட்டுவதற்கு வசதியாக தாய்மார்கள் பாலூட்டும் அறை தர்மபுரி மாவட்ட பொறுப்பு வகிக்கும் ஐகோர்ட்டு நீதிபதிகள் நிஷாபானு, புகழேந்தி ஆகியோரின் அனுமதியுடன் தமிழகத்தில் முதல் முறையாக தற்போது திறக்கப்பட்டுள்ளது. இங்கு வரும் தாய்மார்கள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இங்கு தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்படும் என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி மோனிகா, மாவட்ட மகளிர் விரைவு கோர்ட்டு நீதிபதி சையத் பக்ரத்துல்லா, மாவட்ட குடும்ப நல கோர்ட்டு நீதிபதி செல்வமுத்துக்குமாரி, விபத்து வழக்குகள் தீர்ப்பாய மாவட்ட சிறப்பு நீதிபதி மணிமொழி, மக்கள் நீதி மன்ற நிரந்தர நீதிபதி ராஜா, தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு ராஜ்குமார், சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி கலைவாணி உள்ளிட்ட நீதிபதிகள், மாஜிஸ்திரேட்டுகள், வக்கீல் சங்க தலைவர் பாலு மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கலெக்டர்
இதைத்தொடர்ந்து ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடந்த உலக மகளிர் தின விழா மாவட்ட முதன்மை நீதிபதி திலகம் தலைமையில் நடந்தது. விழாவையொட்டி பெண் ஊழியர்கள், பெண் வக்கீல்கள் பங்கேற்ற பல்வேறு விளையாட்டு போட்டிகள், நடன நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
இந்த விழாவில் கலந்துகொண்டு கலெக்டர் திவ்யதர்சினி பேசுகையில், வழக்கமாக நீதிபதிகளுக்கும், வக்கீல்களுக்கும் இடையே ஒரு இடைவெளி இருக்கும். ஆனால் எந்தவித வேறுபாடுமின்றி நீதிபதிகள், வக்கீல்கள், நீதித்துறை ஊழியர்கள் ஒருங்கிணைந்து மகளிர் தினவிழாவை இங்கு நடத்தி இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இது ஒரு முன் உதாரணமாகும் என்று பேசினார். இந்த விழாவில் நீதிபதிகள், வக்கீல்கள் வாழ்த்தி பேசினார்கள். விழாவையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
Related Tags :
Next Story