ஆரணி, சேத்துப்பட்டில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்


ஆரணி, சேத்துப்பட்டில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்
x
தினத்தந்தி 8 March 2022 11:00 PM IST (Updated: 8 March 2022 11:00 PM IST)
t-max-icont-min-icon

ஆரணி, சேத்துப்பட்டில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது.

ஆரணி

ஆரணி, சேத்துப்பட்டில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது.

 ஆரணி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கோட்டை மைதானம் அருகே உள்ள வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் ஆரணி வருவாய் கோட்டாட்சியர் கவிதா தலைமையில் நடந்தது. 

வேளாண் உதவி இயக்குனர் திருமலைச்சாமி முன்னிலை வகித்தார். ஆரணி தாசில்தார் பெருமாள் வரவேற்றார். ‌கூட்டத்தில் பேசிய விவசாயிகள் ஆரணி நகரில் பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். 

ஆரணி புது மசூதி தெருவில் செயல்பட்டு வரும் மத்திய கூட்டுறவு வங்கியில் மகளிர்களுக்கு கடன் உதவிகள், உரிய ஆவணங்கள் கொடுத்தாலும் வழங்கப்படுவதில்லை, பனையூர்- அப்பந்தாங்கல் பகுதிகளில் அதிக அளவில் நெல் விளைச்சல் அதிகரித்து இருப்பதால் அந்த பகுதியில் அரசின் சார்பில் நேரடி நெல் கொள்முதல் மையங்கள் அமைக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

குன்னத்தூரில் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே 2 குளங்கள் உள்ளன, முறையாக தண்ணீர் அங்கு செல்லக்கூடிய சூழ்நிலை இல்லை, அதனை சீரமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதிகாரிகள் உடனுக்குடன் சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். 

 சேத்துப்பட்டு

சேத்துப்பட்டு வேளாண்மை விரிவாக்க மையம் சார்பில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் சமுதாய கூடத்தில் நடந்தது. மாவட்ட ஊரக உதவி இயக்குனர் (பஞ்சாயத்து) சுரேஷ்பாபு தலைமை தாங்கினார். 

சேத்துப்பட்டு தாசில்தார் கோவிந்தராஜ், பேரூராட்சி செயல் அலுவலர் ரவிச்சந்திர பாபு, வட்டார வளர்ச்சி அலுவலர் ரேணுகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சேத்துப்பட்டு வட்டார வேளாண்மை விரிவாக்க மைய உதவி இயக்குனர் நாராயணமூர்த்தி வரவேற்றார். கூட்டத்தில் விவசாயிகள் பேசுகையில், சேத்துப்பட்டு பகுதியில் உள்ள தனியார் உரக்கடைகளில் விவசாயிகள் யூரியா உரம் வாங்கும் போது, இடுபொருட்களை கட்டாயம் வாங்க வேண்டும் என்று கூறுகிறார்கள். 

சேத்துப்பட்டு அருகே உள்ள மேலத்தாங்கல் கூட்ரோட்டில் இருந்து மேலத்தங்கல் கிராமத்திற்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதேபோல பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். 

இதுதொடர்பாக விவசாயிகள் கோரிக்கை மனுவும் அளித்தனர். 
கூட்டத்தில் கால்நடை மருத்துவர் ஹரிகுமார், மின்வாரிய உதவி பொறியாளர் பக்தவசலம், பெரணமல்லூர் வட்டார வேளாண்மை துணை அலுவலர் ராஜாராம் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story