சின்னகொத்தூரில் பெண்ணின் நடுகல் கண்டுபிடிப்பு


சின்னகொத்தூரில்  பெண்ணின் நடுகல் கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 8 March 2022 11:01 PM IST (Updated: 8 March 2022 11:01 PM IST)
t-max-icont-min-icon

வேப்பனப்பள்ளி அருகே சின்னகொத்தூரில் பெண்ணின் நடுகல் கண்டுபிடிக்கப்பட்டது.

வேப்பனப்பள்ளி:
வேப்பனப்பள்ளி அருகே சின்னகொத்தூரில் பெண்ணின் நடுகல் கண்டுபிடிக்கப்பட்டது.
நடுகல்
கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவும், அரசு அருங்காட்சியகமும் இணைந்து வேப்பனப்பள்ளி அருகே உள்ள சின்னகொத்தூர் கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டது. அங்கு சாக்கியம்மாள் கோவில் என்ற இடத்தில் இருந்த உடைக்கப்பட்ட சாஸ்தா சிலையும், அருகே உள்ள இடங்களையும் ஆய்வு செய்தனர். அப்போது, மண்ணில் ஒரு நடுகல் புதைந்திருப்பது தெரியவந்தது. இதை ஊர்மக்கள் உதவியுடன் தோண்டி நடுகல்லை வெளியே எடுத்தனர்.
இது குறித்து கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது:-
இந்த நடுகல் 16-ம் நூற்றாண்டை சேர்ந்தது. நடுகல்லில் உள்ள பெண், தோளில் மாலையுடனும், பிற அணிகலன்களுடனும், ஒரு விரலை உயர்த்தி காட்டிய நிலையில் அமர்ந்திருப்பது போன்று காணப்பட்டது. இதை பார்க்கும் போது, இப்பெண்ணுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவம் தெரிய வருகிறது. அந்த பெண்ணை ஒரு ஆண் வீரன் வெட்டுகிறான். அவனும் போரிடும் நிலையில் இல்லை என்பது தோற்றத்தில் இருந்து தெரிய வருகிறது. 
தியாகத்தின் மறு உருவம்
அந்த பெண்ணை நரபலி கொடுத்தபின் இவரை தெய்வமாக அந்த பகுதி மக்கள் வழிபட்டு இருந்தது தெரிய வருகின்றது. இதன் தொடர்ச்சியாக, சிவன் கோவில் புனரமைப்பின் போது எடுக்கப்பட்ட ஒரு நடுகல் இதன் தோற்றத்தை அப்படியே பெற்று இருந்ததுடன் அதில் கல்வெட்டும் காணப்பட்டது. அதில், "தீத்தமலை உடனே தலை வெட்டு" என்ற வாசகம் இடம்பெற்று உள்ளது. தீர்த்தம் என்ற இடம் இந்த இடத்தில் இருந்து, 4 கிலோ மீட்டர் தொலைவில் சிவன்கோவில் உள்ள இடம் ஆகும். 
தியாகத்தின் மறு உருவம் பெண் என்பதற்கான ஆதாரமாக, ஒரு வேண்டுதலுக்காகவோ, போருக்காகவோ, வேறு முக்கிய நிகழ்வுக்காகவோ இவர் தானாக நரபலிக்கு முன் வந்திருப்பது இந்த நடுகல் மூலம் தெரிய வருகிறது. சாக்கியம்மாள் என்று இவர்கள் பெயர் வைத்திருப்பது தெருகூத்தின் வழி வந்ததாக இருக்கக்கூடும். ஆனால் இவருக்கு வேறு பெயர் இருந்திருக்கும்.
வரலாற்றில் முக்கிய இடம்
காலத்தின் மாற்றத்தில் இது செல்லியம்மன் என அழைக்கப்படுகிறது. தன் தலையை தானே அறுத்து பலியிடும் நவகண்ட சிற்பத்தில் இருந்து இது வேறுபட்டது. இது தமிழகத்தின் நடுகல் வரலாற்றில் ஒரு முக்கிய இடம் பெறும் என்பதில் ஐயமில்லை. 
இவ்வாறு அவர் கூறினார். 
இந்த ஆய்வின் போது வரலாற்று குழுத்தலைவர் நாராயணமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர் தமிழ்ச்செல்வன், விஜயகுமார், ரவி, செல்வகுமார் மற்றும் ஊர்மக்கள் உடன் இருந்தனர்.

Next Story