திருச்செங்கோடு அருகே 1,100 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்-கூலித்தொழிலாளி கைது


திருச்செங்கோடு அருகே 1,100 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்-கூலித்தொழிலாளி கைது
x
தினத்தந்தி 8 March 2022 11:02 PM IST (Updated: 8 March 2022 11:02 PM IST)
t-max-icont-min-icon

திருச்செங்கோடு அருகே 1,100 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், கூலித்தொழிலாளியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல்:
ரேஷன் அரிசி பறிமுதல்
நாமக்கல் குடிமைபொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் அகிலன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சத்தியபிரபு, போலீஸ் ஏட்டு கூத்தகவுண்டன் ஆகியோர் திருச்செங்கோடு அருகே உள்ள மாங்குட்டைபாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு புதர் சூழந்த பகுதியில் 40 வயது மதிக்கதக்க ஒருவர் மொபட்டில் இருந்து மூட்டைகளை இறக்கி கொண்டு இருந்தார். சந்தேகத்தின் பேரில் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியபோது, அவர் ராசிபுரம் அருகே உள்ள கட்டநாச்சம்பட்டி பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி பழனிசாமி (வயது 40) என்பதும், ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்து இருந்ததும் தெரியவந்தது.
தொழிலாளி கைது
அவர் கொடுத்த தகவலின் பேரில் 22 பிளாஸ்டிக் சாக்குகளில் வைக்கப்பட்டு இருந்த 1,100 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போலீசார், தொழிலாளி பழனிசாமியை கைது செய்து ரேஷன் அரிசி எங்கிருந்து வாங்கி வரப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடம் இருந்து மொபட்டும் பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story