குமாரபாளையம் அருகே கார் மீது லாரி மோதியதில் வாலிபர் பலி-உறவினர் படுகாயம்
குமாரபாளையம் அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் பலியானார். அவருடைய உறவினர் படுகாயம் அடைந்தார்.
குமாரபாளையம்:
வாலிபர்
நாமக்கல் மாவட்டம் சிங்கிலிப்பட்டியை சேர்ந்தவர் கந்தசாமி மகன் சூர்யா (வயது 22). திருமணமாகாத இவர் மலேசியாவில் வேலை பார்த்து வந்தார். விடுமுறையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிங்கிலிப்பட்டிக்கு வந்தார். இந்தநிலையில் நேற்று காலை சூர்யா, தனது மாமா விக்னேஷ் (26) என்பவருடன், கோவையில் உள்ள உறவினரை பார்க்க காரில் புறப்பட்டார். காரை சூர்யா ஓட்டினார்.
கார் திருச்செங்கோடு, சங்ககிரி ஆர்.எஸ்.வழியாக சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. குமாரபாளையம் அருகே வட்டமலை என்ற இடத்தில் முன்னால் சென்ற லாரியை சூர்யா முந்த முயன்றார். அப்போது லாரியின் பக்கவாட்டில் கார் உரசியது.
2 பேர் படுகாயம்
இதில் கட்டுப்பாட்டை இழந்த கார், மறு பக்கமான சேலம் சாலைக்கு பாய்ந்து சென்று கவிழ்ந்தது. அப்போது, அந்த வழியாக வந்த லாரி திடீரென கார் மீது மோதியது. இதில் இடிபாடுகளில் சிக்கி சூர்யா, விக்னேஷ் பலத்த காயம் அடைந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் ரத்த வெள்ளத்தில் துடித்த அவர்கள் 2 பேரையும் மீட்டு ஆம்புலன்சு மூலம் குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.
அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில், 2 பேரும் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் சூர்யா செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். விக்னேசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போலீசார் விசாரணை
இதையடுத்து சூர்யா உடல் குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு பிரேத பரிசோதனை கூடத்தில் சூர்யா உடலை அனுமதிக்க டாக்டர்கள் மறுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த குமாரபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி, டாக்டர்களிடம் பேசி பிரேத பரிசோதனை செய்ய அனுமதி பெற்றார். சுமார் ஒரு மணி நேரத்துக்கு பிறகு சூர்யாவின் உடல் பிரேத பரிசோதனை கூடத்துக்குள் கொண்டு செல்லப்பட்டது.
இந்த விபத்து தொடர்பாக குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். குமாரபாளையம் அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story