தாயை இழந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் டாக்டரின் மனைவி


தாயை இழந்த குழந்தைக்கு  தாய்ப்பால் கொடுக்கும் டாக்டரின் மனைவி
x
தினத்தந்தி 9 March 2022 12:00 AM IST (Updated: 9 March 2022 12:00 AM IST)
t-max-icont-min-icon

தாயை இழந்த குழந்தைக்கு டாக்டரின் மனைவி 3 மாதமாக தாய்ப்பால் கொடுத்து வருகிறார்.

வேலூர்

தாயை இழந்த குழந்தைக்கு டாக்டரின் மனைவி 3 மாதமாக தாய்ப்பால் கொடுத்து வருகிறார். இதுபற்றி அவர் கூறுகையில் ‘தாய்ப்பாலின் நன்மை குறித்து தாய்மார்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இதனை செய்து வருகிறேன்’ என தெரிவித்தார்.

தாய்ப்பால் தானம்

தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் என்று கூறுவார்கள். அதையும் தாண்டி பலர் ரத்ததானம், கண்தானம், உடல் உறுப்புகள் தானம், உடல் தானம் செய்து வருகின்றனர். ஆனால் வேலூரை சேர்ந்த கால்நடை டாக்டரின் மனைவி ஒருவர் தாய்ப்பாலை தானமாக ஒரு குழந்தைக்கு வழங்கி வருகிறார். அதுகுறித்து இங்கு காண்போம்:-

வேலூர் அருகே உள்ள கீழ்அரசம்பட்டு கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவரின் மனைவி கர்ப்பிணியாக இருந்தார். இவர் வேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு பிரசவத்தில் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் அந்த பெண் அன்றே பரிதாபமாக இறந்துவிட்டார். இதனால் தாய்ப்பாலும், தாயின் பாசமும் அந்த குழந்தைக்கு கிடைக்கவில்லை. அந்த குழந்தை தந்தையின் அரவணைப்பில் வளர்ந்து வருகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி

அந்த விவசாயி தனது கால்நடைகளை வேலூர் அரசு கால்நடை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அடிக்கடி கொண்டு வருவது வழக்கம். அப்போது அவரது மனைவி இறந்ததும், குழந்தை தாயின்றி வளர்ந்து வருவதும் கால்நடை மருத்துவர் ரவிசங்கருக்கு தெரியவந்தது. இதுகுறித்து அவர், தனது மனைவி சந்தியாவிடம் (வயது 26) தெரிவித்தார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் சந்தியா, தாயின்றி வளரும் அந்த ஆண் குழந்தைக்கு தாய்ப்பால் தானமாக கொடுக்க விரும்புவதாக தனது கணவரிடம்  தெரிவித்தார். அவரும் சம்மதம் தெரிவிக்கவே கடந்த 3 மாதமாக வாரம் ஒருமுறை காட்பாடியில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கீழ்அரசம்பட்டுக்கு பயணம் செய்து அந்த குழந்தைக்கு சந்தியா தாய்ப்பால் ஊட்டி வருகிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ஒரு குழந்தைக்கு உடல் ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி தாய்ப்பால் இருந்தால் மட்டுமே கிடைக்கும். எனவே அந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க நினைத்தேன். என்னை பொறுத்தவரையில் தாய்ப்பால் தானம் தான் சிறந்த தானமாகும். 

தாய்ப்பால் வங்கி

ஏராளமான குழந்தைகள் தாய்ப்பால் இன்றி வளர்கிறது. பாலூட்டும் தாய்மார்கள் தாய்ப்பாலை தானமாக கொடுக்க முன்வரவேண்டும். இதுகுறித்த விழிப்புணர்வு பெண்களுக்கு ஏற்பட வேண்டும். எனவே நானும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். 

இது தொடர்பாக விழிப்புணர்வை மக்களிடையே கொண்டு செல்ல எனது கணவர், தாய்ப்பால் சேமிப்பு வங்கி தொடங்க உள்ளார். இதற்கான முன்னேற்பாடு பணிகளை கடந்த ஒருமாதமாக செய்து வருகிறார். அதற்கு நானும் உதவி வருகிறேன் என்றார். டாக்டர் ரவிசங்கர் சமூக சேவைகள் பலவற்றில் ஈடுபட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

Next Story