ஒகேனக்கல் அருவில் குளித்த போது ஜோலார்பேட்டை மாணவி நீரில் மூழ்கி பலி
ஜோலார்பேட்டை பகுதியை சேர்ந்த பிளஸ்-1 மாணவி தனது பாட்டியின் இறுதி சடங்கிற்காக ஒகேனக்கல் சென்றபோது நீரில் மூழ்கி பலியானார்.
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டை பகுதியை சேர்ந்த பிளஸ்-1 மாணவி தனது பாட்டியின் இறுதி சடங்கிற்காக ஒகேனக்கல் சென்றபோது நீரில் மூழ்கி பலியானார்.
இறுதி சடங்கிற்கு சென்றனர்
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ள ஏலகிரி கிராமம் நேதாஜி நகரை சேர்ந்தவர் இளையராஜா, அரசு பஸ் கண்டக்டர். இவரது மகள் ஜனனி (வயது 16). இவர் திருப்பத்தூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.
இவரது பாட்டி கமலாம்பாள் கடந்த 15 தினங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் பாட்டிக்கு காரியம் செய்து விட்டு இறுதி சடங்கு செய்வதற்காக தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் அருவிக்கு மாணவி ஜனனி மற்றும் பெற்றோர், உறவினர்களுடன் நேற்று முன்தினம் காலை சென்றனர்.
அங்கு ஒகேனக்கல் அருவி முதலைப்பண்ணை அருகே ஜனனி மற்றும் தாயார் வளர்மதி மற்றும் சிலர் குளித்துக் கொண்டு இருந்தனர். அப்போது மாணவி ஜனனி திடீரென ஆழமான பகுதிக்கு சென்று விட்டார். இதனால் அவர் நீரில் மூழ்கினார்.
நீரில் மூழ்கி பலி
இதை பார்த்த அவருடைய தாயார் வளர்மதி, மகளை காப்பாற்ற முயன்றார். உறவினர்களும் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.
உடனடியாக ஒகேனக்கல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் ஒகேனக்கல் தீயணைப்பு துறையினர் மற்றும் உள்ளூர் படகு ஓட்டிகள் மூலம் மாணவியை தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் போராடி முதலைப் பண்ணை அருகே உள்ள ஆற்றில் மாணவி பிணமாக மீட்கப்பட்டார்.
இது குறித்து தகவலறிந்ததும் ஒகேனக்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பாட்டி இறந்த இறுதி சடங்கு செய்வதற்காக பெற்றோர்களுடன் சென்ற மாணவி தண்ணீரில் மூழ்கி இறந்த சம்பவம் ஜோலார்பேட்டை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story