பெண்களுக்கு எதிரான குற்றங்களை தைரியமாக வெளியே கொண்டுவர வேண்டும்; மாவட்ட உரிமையியல் நீதிபதி பேச்சு
பெண்களுக்கு எதிரான அனைத்து குற்றங்களையும் அச்சம் இன்றி தைரியமாக வெளியே கொண்டு வரவேண்டும் என்று மகளிர் தின விழாவில் மாவட்ட உரிமையியல் நீதிபதி மாலதி பேசினார்.
வாணியம்பாடி
பெண்களுக்கு எதிரான அனைத்து குற்றங்களையும் அச்சம் இன்றி தைரியமாக வெளியே கொண்டு வரவேண்டும் என்று மகளிர் தின விழாவில் மாவட்ட உரிமையியல் நீதிபதி மாலதி பேசினார்.
மகளிர் தினவிழா
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரியில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி தலைமை தாங்கினார். இதில் தூய்மைபணி மற்றும் முன் களப்பணியில் ஈடுபட்டுள்ள பெண்கள் முதல் பல்வேறு துறையில் உயர் பதவி வகிக்கும் பெண்கள் கலந்துகொண்டனர்.
சிறப்பு அழைப்பாளராக வாணியம்பாடி மாவட்ட உரிமையியல் நீதிபதி மாலதி கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசியதாவது:-
விட்டுக்கொடுக்கக்கூடாது
சொத்துகளில் பெண்களுக்கு சம உரிமை உள்பட பெண்களை பாதுகாக்க பல்வேறு சட்டங்கள், உரிமைகள் மற்றும் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.
தேர்தலில் தமிழகத்தில் 50 சதவீத இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு பதவி, பொறுப்பு கொடுக்கும்போது நாம் அதை எப்படி வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வது, அதற்கு எதிராக வரும் தடைகளை எப்படி எதிர்கொள்வது என்ற முழு பொறுப்பும் பெண்களுக்கு உண்டு.
பின்னால், ஒரு ஆணை வைத்து இயக்குவது பெண்களுக்கான உரிமையை விட்டு கொடுப்பது போன்று அர்த்தம். இது போன்ற உரிமைகளை பெண்கள் விட்டுக்கொடுக்காமல் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
வெளியே கொண்டு வரவேண்டும்
பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் ரீதியான வன்கொடுமைகளையும், குற்றங்களையும் தைரியமாக வெளியே கொண்டு வந்தால் மட்டுமே சட்டங்களை அமல்படுத்த முடியும். பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை தடுக்க முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் வருவாய்த்துறை ஊழியர்கள் சுகாதாரத்துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story