நடராஜர் கோவில் தீட்சிதர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி
சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை மேடையில் ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கும் விவகாரம் தொடர்பாக தீட்சிதர்களுடன் நடந்த அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.
சிதம்பரம்,
சிதம்பரம் நடராஜர் கோவிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவிலில் உள்ள கனகசபையில் ஏறி சாமி தரிசனம் செய்ய முயன்ற பெண்ணை தீட்சிதர்கள் திட்டி தடுத்து நிறுத்தி வெளியேற்றியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களை கைது செய்யக்கோரியும், கனகசபை மேடையில் அனைத்து பக்தர்களையும் அனுமதித்து தேவாரம், திருவாசகம் பாட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் சிதம்பரம் பகுதியில் அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில் இது தொடர்பாக சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது. இதற்கு கோட்டாட்சியர் ரவி தலைமை தாங்கினார்.
பேச்சுவார்த்தை தோல்வி
சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் ராஜ், தாசில்தார் ஆனந்த், சப்- இன்ஸ்பெக்டர் நாகராஜ், நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கோட்டாட்சியர் ரவி கூறுகையில், கனகசபை மேடையில் ஏறி சாமி தரிசனம் செய்ய பக்தர்களை அனுமதிக்கும்படி அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே சாமி தரிசனம் செய்ய கனகசபை மேடையில் அனைவரையும் ஏற தீட்சிதர்கள்அனுமதிக்க வேண்டும் என்றார். அப்போது பொது தீட்சிதர்கள் இது தொடர்பாக அனைத்து தீட்சிதர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் நாங்கள் ஆலோசனை செய்து முடிவை சொல்கிறோம் என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றனர். இதன் காரணமாக முடிவு ஏதும் ஏற்படாததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.
Related Tags :
Next Story