பருத்தி சாகுபடியில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை


பருத்தி சாகுபடியில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை
x
தினத்தந்தி 9 March 2022 12:44 AM IST (Updated: 9 March 2022 12:45 AM IST)
t-max-icont-min-icon

நயினார்கோவில் பகுதியில் பருத்தி சாகுபடியில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்து வேளாண்மை அதிகாரி ஆய்வு செய்தார்.

நயினார்கோவில்
நயினார்கோவில் பகுதியில் பருத்தி சாகுபடியில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்து வேளாண்மை அதிகாரி ஆய்வு செய்தார்.
பருத்தி சாகுபடி
நயினார்கோவில் வட்டாரம் வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பாக நீடித்த பருத்தி சாகுபடி இயக்கம் திட்டத்தின் கீழ் 15 செயல் விளக்க திடல்கள் அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் பருத்தி சாகுபடி செய்யும் விவசாயிகள் பருத்தியில் சாறு உறிஞ்சும் பூச்சிகள் மற்றும் காய் புழுக்கள் தாக்குதலால் மகசூல் இழப்பை தவிர்ப்பதற்கு ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை கடைப்பிடிக்க அறிவுறுத்தப்படுகிறது. ஒரு எக்டரில் பருத்தி வயல்களில் செயல் விளக்க திடல்கள் அமைக்கும் விவசாயிகளுக்கு விதை நேர்த்தி செய்வதற்கு டிரைக்கோடெர்மா 2.5 கிலோ, மஞ்சள் ஒட்டும் பொறி 12, காய் புழுக்களை கட்டுப்படுத்த இனக்கவர்ச்சி பொறிகள் 12. வேப்ப எண்ணெய் 500 மி.லி, பேட்டரியால் இயங்கும் தெளிப்பான் போன்ற இடுபொருள்கள் மானியத்தில் வழங்கப்படுகிறது. 
பருத்தி சாகுபடி செய்த வரப்புகளில் 30 சென்டி மீட்டர் இடைவெளியில் உளுந்து வரப்பு பயிராக சாகுபடி செய்ய 3 கிலோ உளுந்து மானியத்தில் வழங்கப்படுகிறது. இதனால் பருத்தியை தாக்கும் பூச்சிகளின் இயற்கை எதிரிகளான கிரை சோபா பூச்சி, பொறிவண்டு அதிக அளவில் பெருகும். இவை அசுவினி வெள்ளை தத்துப் பூச்சிகளை பெருமளவில் அழித்துவிடும். 
மானியம்
எக்டருக்கு 12 இனக்கவர்ச்சி பொறிகளை வைப்பதால் காய் புழுக்களின் அந்து பூச்சிகள் கவரப்பட்டு இனச்சேர்க்கை தவிர்க்கப்படும். மஞ்சள் ஒட்டும் பொறி வயல்களில் 12 வைப்பதால் சாறு உறிஞ்சும் பூச்சிகள் விழுந்து மடியும். ஒரு எக்டருக்கு 2.5 கிலோ டிரைகோடெர்மா விரிடி உயிர் காரணியை மணலுடன் கலந்து வயல்களில் இடுவதால் வேரழுகல், நாற்றழுகல் நோயை கட்டுபடுத்தலாம். 
கடைசி உழவில் ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு வயலில் இடுவதால் தண்டு கூன் வண்டு தாக்குதலிலிருந்து கட்டுப்படுத்தலாம். வேப்பம் புண்ணாக்கு 50 சதவீத மானியத்தில் வேளாண்மை விரிவாக்க மையம் நயினார்கோவிலில் கிடைக்கும். நயினார்கோவில் வட்டாரம் சிரகிக்கோட்டை கிராமத்தில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை செயல் விளக்க திடல் வயலை வேளாண்மை துணை இயக்குனர் பாஸ்கரமணியன் ஆய்வு செய்தார். அப்போது வேளாண்மை உதவி இயக்குனர் தரக்கட்டுப்பாடு நாகராஜன், வேளாண்மை உதவி இயக்குனர் நயினார்கோவில் பானு பிரகாஷ், உதவி வேளாண்மை அலுவலர் நவீன்ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story