அரசு கல்லூரி விடுதி மாணவிகள் தர்ணா போராட்டம்


அரசு கல்லூரி விடுதி மாணவிகள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 9 March 2022 12:49 AM IST (Updated: 9 March 2022 12:49 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலம் அரசு கல்லூரி விடுதி மாணவிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருத்தாசலம், 

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரி அருகே கல்லூரி மாணவ- மாணவிகள் நலன் கருதி தனித்தனியே விடுதிகள் இயங்கி வருகிறது. அதன்படி கல்லூரி அருகே உள்ள பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் மாணவியர்களுக்கான  விடுதியில் 100-க்கும் மேற்பட்டவர்கள் தங்கி கல்லூரிக்கு சென்று வருகின்றனர்.
 இந்தநிலையில் சுகாதாரமான உணவு மற்றும் மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக செய்து கொடுக்கப்படவில்லை என கூறி விடுதியை சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட மாணவிகள் நேற்று காலை உணவு சாப்பிடாமல் புறக்கணித்தனர். பின்னர் அவர்கள் விடுதியின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதுகுறித்த தகவலின் பேரில் கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரி முதல்வர் ராஜவேல் விரைந்து வந்து மாணவிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது மாணவிகள் தங்களுக்கு உணவு தரம் இன்றி வழங்கப்படுகிறது. சுகாதாரம் இன்றி விடுதி இருப்பதால் விஷப்பூச்சிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.

குழு அமைத்து விசாரணை

 மேலும் எங்களுக்கு போர்வைகள் வழங்கப்படவில்லை. குறிப்பாக விடுதிக்கும் வரும் வழியில் மின்விளக்குகள் இல்லை. இதனால் நாங்கள் பெரும் சிரமம் அடைந்து வருகிறோம். இது குறித்து கேட்டால், விடுதியை விட்டு வெளியே செல்லுங்கள் என்று விடுதி நிர்வாகத்தினர் கூறுகின்றனர் என்று குற்றம்சாட்டினர்.  இது குறித்து கல்லூரி பேராசிரியர்களை கொண்டு குழு அமைத்து விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கல்லூரி முதல்வர் ராஜவேல் மாணவிகளிடம் கூறினார். அதனை ஏற்று மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.  இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story