கரூர் வேளாண்மை கல்லூரியில் இந்த ஆண்டே மாணவர் சேர்க்கை-அமைச்சர் வி.செந்தில்பாலாஜி பேச்சு
கரூர் வேளாண்மை கல்லூரியில் இந்த ஆண்டே மாணவர் சேர்க்கை நடைபெறும் என அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கூறினார்.
கரூர்,
நலத்திட்ட உதவிகள்
கரூரில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, உழவர்நலன் மற்றும் வேளாண்மைத்துறை ஆகிய துறைகளின் சார்பில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு உதவித்தொகைகள் வழங்கும் திட்டங்கள் மற்றும் இதர அரசுத்துறைகளின் திட்டங்கள் மூலம் 1,117 பயனாளிகளுக்கு ரூ.1.35 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி வழங்கினார்.
நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் இளங்கோ (அரவக்குறிச்சி), சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம்), மாணிக்கம் (குளித்தலை), கரூர் மாநகராட்சி மேயர் கவிதா, துணை மேயர் தாரணி சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
உதவித்தொகை
இந்தநிகழ்ச்சியில் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி பேசும்போது கூறியதாவது:- தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற 9 மாத காலத்திற்குள் கரூர் மாவட்டத்தில் 9 ஆயிரத்து 828 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உள்ளிட்ட உதவித்தொகைகளுக்கான அரசாணை முதல்-அமைச்சரின் ஆணைக்கிணங்க வழங்கப்பட்டுள்ளது. தற்போது 1,108 பயனாளிகளுக்கு உதவித்தொகைகளுக்கான ஆணைகள் வழங்கப்படுகிறது.
கரூர் மாவட்டத்தில் இதுவரை 10 ஆயிரத்து 936 முதியோர், விதவை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை பெறும் வகையில் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
மாணவர் சேர்க்கை
கரூர் மாவட்டத்திற்கு புதிய அரசு வேளாண்மை கல்லூரியினை முதல்-அமைச்சர் வழங்கியுள்ளார். அவரின் உத்தரவை பெற்று இந்த ஆண்டே புதிய வேளாண்மை கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இதனைத்தொடர்ந்து வருவாய்த்துறையின் மூலம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து நீரில் மூழ்கி உயிரிழந்த 2 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.2 லட்சம் ரொக்கத்திற்கான காசோலையினையும், 1,108 பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகைகளுக்கான ஆணைகளையும், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் பணியின் போது உயிரிழந்த 2 பேரின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளையும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் 5 பேருக்கு பண்ணைக் கருவிகள், சிறுதானியங்கள், திரவ உரம் தெளிப்பான் உள்ளிட்ட நலத்திட்டங்களையும். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் மூலம் கரூர் மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட இரண்டு 108 அவசர கால ஊர்தி வாகனங்களையும் அமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அகல்விளக்கு திட்டம்
இதனைத்தொடர்ந்து கரூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே அமைக்கப்பட்டுள்ள நகர வாழ்வாதார மைய வளாகத்தில் வேலைதேடும் நபர்களுக்கும், வேலைதரும் தொழில் நிறுவனங்களுக்கும் இணைப்பை ஏற்படுத்தி தனியார் வேலைவாய்ப்புகளை உருவாக்கி தரும் பாலம் திட்டத்தினையும், கரூர் மாநகராட்சி பல்நோக்கு கூட்ட அரங்கில் பள்ளி மாணவிகளுக்கு குழந்தை திருமணத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், பாலியல் வன்கொடுமைகள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தி திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்கும் வகையில் செயல்படுத்தப்படும் அகல்விளக்கு திட்டத்தையும் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்.
Related Tags :
Next Story