மேலப்பாளையம் சந்தையில் ஆடு, கோழிகள் விற்பனை அமோகம்
நெல்லை மேலப்பாளையம் சந்தையில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு ஆடு, கோழிகள் விற்பனை அமோகமாக இருந்தது.
நெல்லை:
நெல்லை மேலப்பாளையத்தில் மாநகராட்சி கால்நடை சந்தை அமைந்துள்ளது. இந்த சந்தை செவ்வாய்க்கிழமை தோறும் செயல்படும். இதேபோல் நேற்று கால்நடை சந்தை செயல்பட்டது. அப்போது நெல்லை மற்றும் பிற மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள், வியாபாரிகள் தங்களது ஆடு, மாடுகள் ஆகியவற்றை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். சந்தைக்கு வெளிப்பகுதியில் டக்கரம்மாள்புரம் ரோட்டில் இருபுறமும் ஏராளமான வியாபாரிகள் கோழி வகைகள், கருவாடு மற்றும் பல்வேறு வீட்டு உபயோக பொருட்களை விற்பனைக்காக குவித்து வைத்திருந்தனர்.
நேற்று சந்தையில் வெள்ளாடுகள், செம்மறி ஆடுகளை வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கினார்கள். இதனால் விற்பனை அமோகமாக இருந்தது. வருகிற 18-ந்தேதி பங்குனி உத்திரம் என்பதால் குல தெய்வ கோவில்களில் திருவிழா, வழிபாடு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. அப்போது ஆட்டு கிடாய், சேவல் பலியிட்டு பூஜைகள் நடைபெறும். இதற்காக ஆடுகளை அதிகமானோர் வாங்கியதால் ஆடுகளின் விலை அதிகரித்து இருந்தது.
இதுதவிர குரும்பை ஆடுகளும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது. அதில் அதிக எடை கொண்ட ஒரு குரும்பை ஆடு ரூ.32 ஆயிரத்துக்கு விற்பனை ஆனது. இதை விற்ற வியாபாரி மகிழ்ச்சி அடைந்தார். இதே போல் சேவல்களின் விலையும் உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது.
பங்குனி மாத கோவில் கொடை விழாக்களுக்காக அதிகமானோர் ஆடுகளை வாங்க குவிந்ததால், சந்தை வளாகத்தில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பல லட்சம் ரூபாய்க்கு ஆடுகள், கோழிகள் விற்பனை செய்யப்பட்டதாக தெரிவித்தனர். சந்தையில் கூட்டம் அதிகமாக இருந்ததால் மாநகராட்சி அதிகாரிகள் வியாபாரம் முடித்தவர்களை உடனுக்குடன் அங்கிருந்து வெளியே செல்லுமாறு அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story