இரும்பு தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதியதில் என்ஜினீயர் உள்பட 2 பேர் பலி


இரும்பு தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதியதில் என்ஜினீயர் உள்பட 2 பேர் பலி
x
தினத்தந்தி 9 March 2022 1:55 AM IST (Updated: 9 March 2022 1:55 AM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டையில் நேற்று இரவு சாலையில் வைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் என்ஜினீயர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

நெல்லை:
நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் இஸ்மாயில் நகரைச் சேர்ந்தவர் மாடசாமி. இவருடைய மகன் சுதாகர் (வயது 37). இவர் சென்னையில் உள்ள ஒரு ஐ.டி. கம்பெனியில் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். கே.டி.சி.நகர் வெற்றித்திருநகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் மகன் கோகுலகிருஷ்ணன் (20). இவர்கள் இருவரும் உறவினர்கள்.

நேற்று இரவு சுதாகர், கோகுலகிருஷ்ணன் ஆகிய 2 பேரும் பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் பகுதியில் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அப்போது சாலையில் வைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்பில் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் மோட்டார்சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட சுதாகர், கோகுலகிருஷ்ணன் ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சாலையில் வைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் என்ஜினீயர் உள்பட 2 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.




Next Story