தாளவாடி அருகே பரபரப்பு யானை தாக்கி விவசாயி பரிதாப சாவு; உடலை எடுக்க விடாமல் வனத்துறையினரை பொதுமக்கள் முற்றுகை
தாளவாடி அருகே யானை தாக்கி விவசாயி பரிதாபமாக இறந்தார். உடலை எடுக்க விடாமல் வனத்துறையினர் மற்றும் போலீசாரை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தாளவாடி
தாளவாடி அருகே யானை தாக்கி விவசாயி பரிதாபமாக இறந்தார். உடலை எடுக்க விடாமல் வனத்துறையினர் மற்றும் போலீசாரை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விவசாயி
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தாளவாடியை அடுத்த ஜீர்கள்ளி வனச்சரகத்துக்கு உள்பட்ட திகினாரை ஜோரகாடு பகுதியை சேர்ந்தவர் மாதேவன் (வயது 60). விவசாயி. இவருடைய மனைவி சிவம்மா. இவர்களுடைய மகன்கள் விஜயகுமார், ராஜு.
மாதேவன் தன்னுடைய தோட்டத்தில் கரும்பு சாகுபடி செய்துள்ளார். தோட்டத்திலேயே வீடு கட்டி அவர் குடியிருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் மாதேவனின் கரும்பு தோட்டத்துக்குள் யானை ஒன்று புகுந்தது.
சாவு
யானையை கண்டதும் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக இதுபற்றி ஜீர்கள்ளி வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். தகவல் கிடைத்ததும் வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் வன ஊழியர்கள், அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து யாைனயை பட்டாசு வெடித்து விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
ஆனால் யானை வனப்பகுதிக்குள் செல்லாமல் தோட்டத்துக்குள் அங்கு இங்குமாக ஓடி கரும்பு பயிரை நாசம் செய்தது. அப்போது அங்கு நின்று கொண்டிருந்த மாதேவனை திடீரென்று யானை துதிக்கையால் தூக்கி வீசியது. ஆனாலும் ஆத்திரம் அடங்காத யானை ஓடிச்சென்று மாதேவனை காலால் மிதித்தது. இதையடுத்து அந்த யானை அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. யானை காலால் மிதித்ததில் மாதேவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
முற்றுகை
கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தால் வன ஊழியர்கள் மற்றும் விவசாயிகள் செய்வதறியாது திகைத்தனர். மேலும் மாதேவனின் உடலை பார்த்து அவருடைய உறவினர்கள் கதறி அழுதனர்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும், தாளவாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசு, ஜீர்கள்ளி வனச்சரகர் ராமலிங்கம் மற்றும் வனத்துறையினர், போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மாதேவனின் உடலை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த பொதுமக்கள், ஒன்று திரண்டு வந்து மாதேவனின் உடலை எடுக்கவிடாமல் தடுத்து வனத்துறை மற்றும் போலீசாரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இதைத்தொடர்ந்து பொதுமக்களிடம், வனத்துறை மற்றும் போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகளிடம் பொதுமக்கள் கூறுகையில், ‘கடந்த 2 மாதங்களாக தொடர்ந்து எங்கள் பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்குள் யானைகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இதுகுறித்து வனத்துறையினருக்கு முறையாக தகவல் தெரிவித்தும் யானைகளை விரட்ட அவர்கள் வருவதில்லை.
மேலும் யானைகளால் சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்கு உண்டான இழப்பீட்டு தொகையையும் சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு வழங்குவதில்லை. அதுமட்டுமின்றி விவசாய நிலங்களுக்குள் யானைகள் புகுவதை தடுக்க அகழி அமைக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்துள்ளோம். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது எங்கள் பகுதி விவசாயியை யானை மிதித்து கொன்று உள்ளது. எனவே சம்பவ இடத்துக்கு ஆசனூர் மாவட்ட வன அதிகாரி வரவேண்டும்,’ என்றனர்.
பரபரப்பு
அதற்கு பொதுமக்களிடம் அதிகாரிகள் பதில் அளிக்கையில், ‘உங்கள் கோரிக்கை குறித்து மாவட்ட வன அதிகாரியின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றனர்.
இதில் சமாதானம், அடைந்த பொதுமக்கள் தங்களுடைய போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதையடுத்து மாதேவனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தாளவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே உயிரிழந்த மாதேவனின், குடும்பத்தினருக்கு வனத்துறை சார்பில் முதல் கட்டமாக ரூ.50 ஆயிரம் நிவாரணத்தொகை வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story