தென்காசி மாவட்டத்தில் சட்டமன்ற மனுக்கள் குழுவினர் ஆய்வு
தென்காசி மாவட்டத்தில் சட்டமன்ற மனுக்கள் குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.
தென்காசி:
சட்டமன்ற மனுக்கள் குழு நேற்று தென்காசி மாவட்டத்திற்கு ஆய்வுக்காக வந்தது. இந்த குழுவின் தலைவராக அரசு தலைமை கொறடா கோவி. செழியன் எம்.எல்.ஏ. உள்ளார். அவருடைய தலைமையில் குழு உறுப்பினர்களான எம்.எல்.ஏ.க்கள் அமுல் கந்தசாமி, மு.பெ.கிரி, கோவிந்தசாமி, கே.பி.சங்கர், சந்திரன், பிரபாகர ராஜா, மதியழகன், மாங்குடி மற்றும் செயலாளர் சீனிவாசன், இணைச்செயலாளர் சாந்தி, சார்பு செயலாளர் மோகன் ராஜா ஆகியோர் வந்திருந்தனர்.
காலையில் குற்றாலம் அரசு விருந்தினர் மாளிகையில் இந்த குழுவினர் கூடினர். தென்காசி மாவட்டத்தில் கடந்த 10-9-2021 அன்று அறிவிப்பு செய்யப்பட்டு பெறப்பட்ட மனுக்களில் தெரிவுசெய்த மனுக்கள் மீதான பதில் அறிக்கைகளை ஆய்வு செய்யும் பணி, மற்றும் 40-வது அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்ட மனுக்களின் மீது மறு ஆய்வு செய்யும் பணி நடைபெற்றது.
இந்த குழு வல்லம் அருகே உள்ள பிராமணபத்து குளம், வடகரை அரசு மேல்நிலைப்பள்ளி, இலத்தூர் மதுரநாத சுவாமி கோவில், அந்த பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி, கடையநல்லூர் நகராட்சி தினசரி சந்தை ஆகிய பகுதிகளில் ஆய்வு நடத்தியது.
இந்த குழுவினருடன் மாவட்ட கலெக்டர் கோபால சுந்தரராஜ், எம்.எல்.ஏ.க்கள் பழனி நாடார், கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா, சதன் திருமலைக்குமார் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் சென்றனர். பின்னர் தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மதியம் 3 மணிக்கு இந்த குழுவின் கூட்டம் நடைபெற்றது.
Related Tags :
Next Story